ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் மீது தடுப்பு மருந்துகள் கையாளல் பற்றிய விமர்சனம் வலுக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் கலந்தாலோசிக்காது, ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகிகளோடும் சேர்ந்து திட்டமிடாது ஒன்றியத்தின் தலைவர் உர்ஸுலா வொன் டெர் லெயொன் தனிப்பட்ட முறையில் இயங்கினார் என்ற விமர்சனம் கிளம்பியிருக்கிறது. கொவிட் 19 தடுப்பு மருந்துகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேவைக்காக ஒழுங்கு செய்வதில் அவர் எவருடனும் கலந்தாலோசிக்காமல் முடிவுகள் எடுத்து ஒன்றித்தின் பெயரைக் கெடுத்திருப்பதாகக் கருதப்படுகிறது.

முக்கியமாகக் கடந்த வார ஆரம்பத்தில் அஸ்ரா ஸெனகா நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வினியோகிப்பதாகச் சொன்ன அளவு தடுப்பு மருந்துகளை விடக் குறைந்த அளவே தருவதாகச் சொன்னவுடன் ஒன்றியத் தலைவர் நிலையிழந்து முடிவுகள் எடுத்திருப்பதாக ஒன்றிய நாடுகள் விமர்சிக்கின்றன.

டொனால்ட் டிரம்ப் “அமெரிக்காதான் முதல்,” என்று குறிப்பிட்டு நடந்தது போன்று உர்ஸுலா வொன் டெர் லெயொன் “ஐரோப்பிய ஒன்றியத்துக்கே முதல்” என்ற எண்ணம் ஏற்படும் விதமாகத் தடுப்பு மருந்து ஏற்றுமதிகளை நிறுத்தும் முடிவை எடுத்தார். அது தடுப்பு மருந்துத் தேசியம் என்று உலக நாடுகளால் முத்திரை குத்தப்பட்டது. 

https://vetrinadai.com/news/astrazenaca-eu-uk/

அதிலும் முக்கியமானது அவர் அயர்லாந்துக்கும் – வட அயர்லாந்துக்குமான எல்லையை மூடிவிட முயன்றதாகும். அந்த எல்லையைத் திறந்தபடி வைத்திருக்கவேண்டுமென்பதே ஐரோப்பிய ஒன்றிய – பிரிட்டிஷ் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் மிகப்பெரும் பிரச்சினையாக இருந்தது. 

கடைசிக் கட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தடுப்பு மருந்து ஏற்றுமதிக்கான எல்லைகளை மூடிவிடவில்லையென்றாலும் கூட அஸ்ரா ஸெனகாவுடனான பேச்சுவார்த்தைகளிலிருந்த காட்டம் ஒன்றியத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அமைப்பின் கௌரவத்தைக் குறைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.

உர்ஸுலா வொன் டெர் லெயொன் தலைவர் ஸ்தானத்துக்கு உடனே ஆபத்து ஏற்படாவிட்டாலும், ஒன்றிய நாடுகளிடையே அவருடைய மதிப்புக் குறைந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. எதிர்காலத்தில் வரப்போகும் பிரச்சினைகளை அவர் கையாளப்போவதில் தான் அவரது தலைவர் ஸ்தானம் தொடர்ந்து நிலைக்குமா என்பதின் பதில் இருக்கிறது. 

ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் ஒன்றியத்துக்கான தடுப்பு மருந்துகளைக் கொள்வனவு செய்வதில் சரியான கவனம் செலுத்தப்படவில்லை, தயாரிப்பாளர்களுக்கான விலைகளைக் கொடுப்பதில் கஞ்சத்தனம் காட்டப்பட்டது போன்ற விமர்சனங்களுக்கு தடுப்பு மருந்துகளுக்காகப் பேரம் பேசுவதில் பங்குபற்றிய சாந்திரா கலீனா பதிலளித்தார்.

“நாங்கள் எவ்வளவு பணம் கொடுத்திருந்தாலும் இச்சமயத்தில் இதற்கு மேலான எண்ணிக்கையில் தடுப்பு மருந்துகளைப் பெற்றிருக்க முடியாது. தயாரிப்பாளர்களால் முடிந்தது இவ்வளவு தான்,” என்று குறிப்பிட்ட அவர் கோடைகாலத்தின் இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 70 விகிதமானவர்களுக்கு தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டிருக்கும் என்றார். அத்துடன் மேலும்  இரண்டு நிறுவனங்களுடன் ஐரோப்பிய ஒன்றியம் தடுப்பு மருந்துகளுக்காக ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், மேலும் ஓரிரு மாதங்களில் ஒன்றியத்தின் தேவைக்கும் மிக அதிகமான அளவில் தடுப்பு மருந்துகள் கிடைத்திருக்கும் என்று உறுதியளித்தார். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *