கத்தாரின் உலகக் கோப்பைக்கான கால்பந்துப் போட்டிகளுக்கும், 6,500 மரணங்களுக்கும் சம்பந்தமுண்டா?

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் தமது நாட்டில் உலகக் கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டிகள் நடக்கப்போவது தெரியவந்தபோது ஆர்ப்பரித்து மகிழ்ந்தார்கள் கத்தார் மக்கள். பெருமிதத்துடன் அப்போட்டிகளுக்குக்கான மைதானங்கள், கட்டடங்களைக் கட்ட ஆரம்பித்தது கத்தார். 

கடந்து போன பத்து வருடங்களில் அக்கட்டடங்களின் வேலைகளில் பணி செய்யும்போது இறந்து போயிருப்பவர்களின் எண்ணிக்கை 6,500 ஐத் தாண்டியிருப்பதாகக் கத்தாரின் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது வாராவாரம் பனிரெண்டு தொழிலாளிகள் – வறிய நாட்டுத் தொழிலாளிகள் – தமது உயிர்களை அந்த நாட்டில் இழந்திருக்கிறார்கள். இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், சிறீலங்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து கத்தாருக்குப் போனவர்கள் அவர்கள்.

இறந்துபோன தொழிலாளர்களில் 69 விகிதத்தினர் “இயற்கையான மரணம்” அடைந்தவர்கள் என்று குறிப்பிடுகிறது கத்தார். அந்த நாட்டின் கடுமையான வெம்மைக்குள், பெரும்பாலும் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் ஓய்வுமின்றிப் பணியெடுக்கும் வறிய இளவயதினரே இப்படி இறந்து போகிறவர்கள் என்று சர்வதேச தொழிற்சங்கங்கள் குறிப்பிடுகின்றன. இயற்கையான மரணம் என்று கத்தார் அறிவித்தாலும் மரணமடைந்தவர்களின் உறவினரோ, நாட்டின் தூதுவராலயங்களோ தமது நாடுகளில் பிரேத பரிசோதனை செய்வதில்லை.

நீரின்மை, வேலைசெய்யுமிடத்து விபத்துக்கள், தொழிலாளர்களின் மோசமான வசிப்பிடங்கள், ஒழுங்கான உணவு கிடைக்காதது, போதுமான ஓய்வின்மை போன்ற பல காரணங்களாலேயே பெரும்பாலான இளவயதுத் தொழிலாளர்கள் இறந்துபோகிறார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தத் தொழிலாளர்களின் நிலைமை பற்றி நீண்ட காலமாகவே சர்வதேச ரீதியில் கவனிப்பு எடுக்கப்பட்டாலும் கத்தார் அவர்களுடைய வாழ்க்கை வசதிகள் மேம்பாட்டைச் செய்யாமலிருக்கிறது என்று மீண்டும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *