132 வருடங்கள் இந்திய இராணுவத்துக்குப் பாலூட்டிய இராணுவப் பண்ணை இழுத்து மூடப்படுகிறது.
1889 இல் இந்தியா பிரிட்டிஷ்காரரிடம் இருந்த தருணத்தில் அலாஹாபாத்தில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டது இந்திய இராணுவத்தின் பால் பண்ணை. இந்திய இராணுவ வீரர்களுக்குச் சுத்தமான பாலை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட இந்தப் பண்ணை நிறுவனம் பின்னர் மெதுவாக இந்தியாவெங்கும் பரவின. சம்பிரதாயபூர்வமாக இது மூடப்பட்டபோது இந்திய இராணுவத்துக்குச் சொந்தமான சுமார் 20,000 ஏக்கரில் பரவியிருந்தது.
முப்பதாயிரம் பால் பசுக்களைக் கொண்ட இந்திய இராணுவத்தின் பால்பண்ணைகளின் வரலாறுக்குப் புதனன்று கொடியேற்ற நிகழ்ச்சியுடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 2017 இல் இந்திய அரசு நாட்டின் இராணுவத்தின் அமைப்பை நவீனமாக்கி அதன் முக்கிய நோக்கங்களை மறுபரிசீலனை செய்தபோது இந்தப் பண்ணைகளை மூடிவிட்டு அதில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த இந்திய இராணுவத்தின் சேவையாளர்களை இராணுவத்தின் வெவ்வேறு தளங்களுக்கு மாற்றுவதென்று முடிவெடுக்கப்பட்டது.
இராணுவத்தின் பண்ணை என்று குறிப்பிடப்பட்டாலும் இப்பால்பண்ணைகள் இந்தியா பசு வளர்ப்பு, பால் தயாரிப்பு போன்றவைகளில் முன்னேறுவதற்கு மிகவும் முக்கிய இயந்திரமாக இருந்திருக்கிறது. செயற்கையாகப் பசுக்களைச் சினையூட்டல், நவீனரக பால்பண்ணை முயற்சிகள் போன்றவைகளிலிருந்து இந்தியா பால்பொருள் தயாரிப்பில் தன்னிறைவு பெற்று உலகின் மிகப்பெரும் தயாரிப்பாளராகவும் மாற வழிசெய்ததில் இப்பண்ணைகளின் பங்கு முக்கியமானதாகும்.
சாள்ஸ் ஜெ.போமன்