பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா போர்வீரர்களுக்கு அனுப்பிவைத்த சாக்கலேட் பிரிட்டனில் கண்டெடுக்கப்பட்டது.
சுமார் 121 வருடங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் பிரிட்டனின் சார்பில் போரிட்ட போர்வீரர்களுக்கு அன்றைய பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா பரிசாக அனுப்பியிருந்த சாக்கலேட் அதே பெட்டியுடன் பிரிட்டனில் ஒரு வீட்டின் பரணில் கண்டெடுக்கப்பட்டது.
இங்கிலாந்தின் கிழக்கிலிருக்கும் ஹென்ரி எட்வர்ட் பஸ்டன் – பெடிங்பீல்ட் என்ற பிரபுக்குடும்பமொன்றுக்குச் சொந்தமான வீடொன்றில் அந்தச் சாக்கலேட் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. அவர் தென்னாபிரிக்காவில் பிரிட்டிஷ் போர்வீரராக இருந்த ஒருவராகும்.
அந்தச் சாக்கலேட் தகரப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது. அதனுடன் “உங்களுக்கு எனது புதுவருட வாழ்த்துக்கள்” என்ற மகாராணியின் கையெழுத்துடனான வரிகளும் “தென்னாபிரிக்கா 1900” என்றும் பொறிக்கப்பட்டு விக்டோரியாவின் படமும் இணைக்கப்பட்டிருந்தது.
ஹென்ரி அந்தச் சாக்கலேட்டைத் தனது போர்வீரர்களுக்கான தலைக்கவசத்தினுள் வைத்து மற்றைய இராணுவ உபகரணங்களுடன் ஞாபகமாகப் பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார். 100 வயதான அவரது மகள் 2020 இல் இறந்தபோது அப்பெட்டி கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
1899 – 1902 காலப்பகுதியில் தென்னாபிரிக்காவில் குடியேறிய பூவர் என்று தங்களை தென்னாபிரிக்கர்களாகப் பிரகடனப்படுத்திக்கொண்ட நெதர்லாந்து குடியேற்றக்காரர்கள் இரண்டு பகுதியாரிடையே போர் நிகழ்ந்தது. அவர்களுக்கெதிராக பிரிட்டிஷ் படை அங்கே போரிட்டது. அப்போர்வீரர்களை உற்சாகப்படுத்தவே விக்டோரியா மகாராணியின் சார்பில் சுமார் 100,000 சாக்கலேட்டுகள் தகரப் பெட்டிக்குள் வைத்து அனுப்பப்பட்டன. அவை ஒவ்வொன்றும் சுமார் 225 கிராம் எடையுள்ளவையாக இருந்தன.
அச்சமயத்தில் பிரிட்டனின் மூன்று பெரிய சாக்கலேட் தொழிற்சாலைகளான காட்பரீஸ், பிரை, ரௌண்ட்ரீ ஆகியவை இருந்தன. அவைகளின் உரிமையாளரான குவாக்கர்ஸ் நிறுவனம் அப்போரில் உடன்பாடில்லாத்தால் தமது பெயர்களில் சாக்கலேட்களைப் போர்வீரர்களுக்காக அனுப்ப மறுத்துவிட்டன. எனவே அவர்களின் சாக்கலேட்டுகளைக் கொள்வனவு செய்து பிரிட்டிஷ் இராணுவம் தகரப் பெட்டிகளிலடைத்து அனுப்பியிருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்