பிரெக்ஸிட் இழுபறியால் மீண்டும் கொதிக்கத் தொடங்கியிருக்கும் அயர்லாந்தைக் குளிரவைப்பதில் வெற்றியடைவார்களா அரசியல்வாதிகள்?
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஐக்கிய ராச்சியத்துக்கும் இடையிலான பிரெக்ஸிட் ஒப்பந்தம் வட அயர்லாந்துக்கும், அயர்லாந்துக் குடியரசுக்குமிடையே ஒரு திறந்த எல்லையைக் கொண்டிருக்கிறது. அதன் விளைவு பிரிட்டனின் நிலப்பகுதிக்கும் வட அயர்லாந்துக்குமிடையே ஒரு எல்லை உண்டாகியிருக்கிறது. பிரிட்டிஷ் தயாரிப்புக்களை வட அயர்லாந்துக்குள் கொண்டுவரும் அந்தச் சுங்க எல்லை அமுலுக்கு வந்த நாளிலிருந்தே ஏற்பட்டிருக்கும் மனக்கசப்புக்களே இப்போ பெரிதாக வெடித்திருக்கின்றன.
1922 இல் தனிநாடாகியது அயர்லாந்து, ஆனால், வட அயர்லாந்திலிருக்கும் மூன்று பிராந்தியங்கள் மட்டும் அதன் பின்னும் ஐக்கிய ராச்சியத்தின் பகுதியாகத் தொடர்கின்றன.
அந்த மூன்று பிராந்தியங்களிலும் பலமாக இருக்கும் புரொட்டஸ்தாந்தர்கள் அங்கே சிறுபான்மையினராக வாழும் கத்தோலிக்கரை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்திவந்தனர். அதையெதிர்த்து 1960-கள் முதல் நாட்டில் மனித உரிமைக் குழுக்கள் குரலெழுப்பின. சிறுபான்மையினரான கத்தோலிக்கர் ஒன்றுபட்டனர். புரொட்டஸ்தாந்துக் குழுக்கள் அவர்கள் மீது தாக்குதல்கள் நடாத்த ஆரம்பித்தனர். அதையடுத்து கத்தோலிக்கர்களின் ஆயுதந்தாங்கிய குழு ஐரிஷ் ரிபப்ளிகன் ஆர்மி எதிர்த்தரப்பினருடன் போருக்கு ஆரம்பித்தது.
வட அயர்லாந்துப் பகுதி அயர்லாந்துடன் சேரவேண்டுமென்று கத்தோலிக்கர்கள் போராட, புரொட்டஸ்தாந்தர்கள் தொடர்ந்தும் வட அயர்லாந்து பிரிட்டனின் பகுதியாக இருக்கவேண்டுமென்று போராடினார்கள். பிரிட்டிஷ் அரசு 1969 இல் தனது இராணுவத்தை வட அயர்லாந்துக்குள் அனுப்பியது. போராட்டம் வலுக்க இரண்டு பக்கத்தினரிடையேயும் பல இறப்புக்கள் ஏற்பட்டன. சுமார் 3,700 பேர் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
1998 இல் இரண்டு பகுதியாருக்குமிடையே ஏற்படுத்தப்பட்ட பெரிய வெள்ளி ஒப்பந்தம் இரத்தக் களரிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. அதைத் தொடர்ந்து மெதுவாக நிலைமை கட்டுக்குள் வர 2007 இல் வட அயர்லாந்தில் கத்தோலிக்கர்களும், புரொட்டஸ்தாந்தியர்களும் பங்குபற்றும் ஒரு பிராந்திய பாராளுமன்றம் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் இரு பகுதியாருக்குமிடையே ஒற்றுமை நிலவுவதாகவே தெரிகிறது.
பிரெக்ஸிட் தற்போது ஏற்படுத்தியிருக்கும் வட அயர்லாந்து – பிரிட்டிஷ் சுங்க எல்லையானது பழைய நினைவுகளைச் சிறு சிறு அசம்பாவிதங்களால் கிளறிவிட்டிருக்கிறது. அதேசமயம் வட அயர்லாந்துக் கத்தோலிக்கர்களிடையே அயர்லாந்துடன் இணையவேண்டுமென்ற தாகத்தை மீண்டும் உண்டாக்கியிருக்கிறது.
வட அயர்லாந்துடனான கடல் எல்லையில் மென்மையான கண்காணிப்பை நிர்வகிப்பதாகப் பிரிட்டன் உறுதி கூறியிருப்பினும் பிரிட்டிஷ் பொருட்கள் வழக்கம்போல வட அயர்லாந்தில் கிடைப்பது பற்றிய பிரச்சினைகள், வர்த்தகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம், சுங்கக் காவலில் ஏற்படும் நேர இழப்பு ஆகியவற்றால் வட அயர்லாந்தில் எரிச்சல்கள் உண்டாகியிருக்கிறது.
கடந்த ஒரு வாரமாக வட அயர்லாந்தில் கத்தோலிக்கர்களுக்கும் [ரிபப்ளிகன்காரர்கள்], யூனியனிஸ்ட் எனப்படும் புரொட்டஸ்தாந்தர்களுக்கும் [பிரிட்டனுடன் சேர்ந்திருக்க விரும்புகிறவர்களுக்கும்] இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. எரிநெய்க் குண்டுகள் வீடப்படுகின்றன, ஆங்காங்கே கட்டடங்கள் மீது நெருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. கைகலப்புக்கள் கலவரங்களும் உண்டாகின்றன, பொலீசார் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இப்படியான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டுமென்று இரண்டு பகுதித் தலைவர்களும் கோருகிறார்கள். பிரிட்டிஷ் பிரதமரும், அயர்லாந்தின் பிரதமரும் கூடத் தமது மனக்கசப்பைத் தெரிவித்து நிலைமை கட்டுக்கு மீறமுதல் வேகமாக அமைதியான தீர்வுகளைக் கண்டறியும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
பெல்பாஸ்ட் நகரில் வீதிகளில் கலவரங்கள் ஏற்படுகின்றன. ஆயுதம் தாங்கிய பொலீசார் வீதிகளில் நிறுத்தப்படுவது மக்களிடையே பழைய போர்க்கால நிலையை ஞாபகப்படுத்துகின்றன. வாரத்தின் நடுப்பகுதியில் ஓரளவு நிலைமை கட்டுக்கடங்கியிருக்கிறது. ஆனால், வார இறுதியில் மீண்டும் கைகலப்புகள் ஏற்படலாமா என்ற பயம் காற்றில் கலந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்