ஹொங்கொங்கிலிருந்து பிரிட்டனுக்குப் புகலிடம் தேடி வருகிறவர்களுக்கு உதவ சுமார் 60 மில்லியன் டொலர்களை ஒதுக்குகிறார் ஜோன்சன்.
சீனா தனது பாகங்களில் ஒன்றாக, ஆனால் சுயாட்சியுடனிருந்த ஹொங்கொங் மீதான பிடியைச் சமீப மாதங்களில் இறுக்க ஆரம்பித்தது அறிந்ததே. சீனாவின் பெரும்பாலான சட்டங்கள் ஹொங்கொங்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்த்த ஹொங்கொங் மக்களைச் சீனா தண்டிக்க ஆரம்பித்திருக்கிறது. அதையடுத்து பிரிட்டன் அப்பிரதேச மக்களுக்குப் பிரத்தியேக பிரிட்டிஷ் கடவுச்சீட்டு உட்பட்ட புதிய சலுகைகளை அறிவித்திருந்தது.
ஏற்கனவே ஹொங்கொங்கிலிருந்து பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்திருக்கும் நான்கு குடும்பத்தினருடன் உரையாடிய பிரிட்டிஷ் பிரதமர் வியாழனன்று ஹொங்கொங்கிலிருந்து பிரிட்டனுக்குக் குடிபெயர விரும்புகிறவர்களுக்கான உதவித்திட்ட விபரங்கள் சிலவற்றை அறிவித்தார். அவர்கள் பிரிட்டனின் வெவ்வேறு பகுதிகளில் குடிபுகுவதானால் அவர்களுக்கான கல்வி, வீடுகள், வேலைவாய்ப்பு போன்ற உதவிகளைச் செய்வதற்கு பிரிட்டன் தயாராக இருப்பதாக போரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.
கொங்கொங் குடிகளுக்கு உதவுவதற்காக பிரிட்டிஷ் பகுதிகளில் 30.7 மில்லியன் பவுண்டுகளும் வட அயர்லாந்து, வேல்ஸ், ஸ்கொட்லண்ட் ஆகியவற்றில் 5.8 மில்லியன் பவுண்டுகளும் செலவிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
ஹொங்கொங்கில் வாழும் 7.5 மில்லியன் பேரில் சுமார் 5.7 மில்லியன் பேர் பிரிட்டன் அறிவித்திருக்கும் ஹொங்கொங் – பிரிட்டிஷ் குடியேற்றக் கடவுச் சீட்டுகள் BN(O) பெறும் உரிமையுள்ளவர்கள். அவர்கள் குடியேறும் பட்சத்தில் பிரிட்டன் – ஹொங்கொங் சரித்திரத் தொடர்புகள் பற்றிய பிரத்தியேகக் கல்வியறிவு அவர்களுக்குக் கொடுக்கப்படும்.
இவ்வருட ஆரம்பத்திலிருந்து இதுவரை சுமார் 27,000 பேர் BN(O) கடவுச்சீட்டுக்காக விண்ணப்பித்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்