Featured Articlesஅரசியல்செய்திகள்

டெமொகிரடிக் கட்சியினருக்குள்ளும் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை மதில் திட்டம் ஆதரவு பெற ஆரம்பிக்கிறது.

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் வாக்குறுதியாக ஜோ பைடன் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை மதில் கட்டப்படுவது நிறுத்தப்படும் என்பதாகும். ஆனால், எல்லையில் குவிந்துவரும் தென்னமெரிக்க அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் பைடன் கட்சியினரே அது பற்றி மீண்டும் எதிர்க்கட்சியினருடன் கலந்தாலோசிக்க வேண்டுமென்கிறார்கள்.

https://vetrinadai.com/news/usminor-refugees/

அதேபோலவே டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டு வந்த “மெக்ஸிகோவிலேயே தங்குங்கள்,” கோட்பாடும் கேள்விக்குறியாகிறது டெமொகிரடிக் கட்சிக்குள். அதன் காரணம் ஜோ பைடனின் அரசு அகதிகளை அரவணைக்கும் அரசாக இருக்குமென்ற நம்பிக்கையில் எல்லையில் தஞ்சம் கேட்டுக் குடும்பங்களாக வருபவர்களின் எண்ணிக்கை.

பெப்ரவரி மாதத்தில் 100,000 பேர் மெக்ஸிகோ எல்லையில் தஞ்சம் கோரியிருந்தார்கள். மார்ச் மாதத்தில் எண்ணிக்கை 172,000 பேராகும். நிலைமை அமெரிக்காவின் சமீபத்தைய மிக முக்கிய பேசு பொருளாகியிருக்கிறது. எனவே ரிபப்ளிகன் கட்சியினருடன் சேர்ந்து அகதிகள், எல்லை மதில் ஆகிய இரண்டு பிரச்சினைகளையும் ஆலோசிக்கவேண்டுமென்று ஜோ பைடனின் கட்சிக்குள்ளிருக்கும் சில முக்கிய தலைவர்கள் குரலெழுப்புகிறார்கள். 

எல் சல்வடோர், குவாத்தமாலா, ஹொண்டுராஸ் ஆகிய நாடுகளின் மோசமான லஞ்ச, ஊழல்களாலும், அவற்றின் பக்க விளைவுகளாக அதிகரித்துவரும் வன்முறைகளினாலும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் அங்கிருந்து வெளியே தப்பியோடிக்கொண்டிருக்கிறார்கள். அத்துடன் மெக்ஸிகோவின் போதை மருந்துத் தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றினால் ஏற்படும் வன்முறையும் பலரை அமெரிக்காவுக்குள் ஓடத் தூண்டுகிறது. 

அமெரிக்காவின் எல்லைக்காவல்படைகள் தமது காவலை அதிகப்படுத்தியிருக்கின்றனர். எல்லைப் பொலீசார், சாதாரண பொலீசார், டெக்ஸாஸ் மாநிலத்தின் பாதுகாப்புப் படை, மற்றும் தேசிய பாதுகாப்புப் படை ஆகிய நான்கு பேரும் சேர்ந்து எல்லைகளில் தமது கண்காணிப்பைப் பலப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களைத் தவிரத் தனியாரும் எல்லைப் பாதுகாவலில் ஈடுபட்டு வருகிறார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *