தட்சரின் உபயத்தால் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்களொவ்வொருவரும் வருடாவருடம் 115,000 பவுண்டுகளை அரச கஜானாவிலிருந்து கறக்க முடிகிறது.
“முன்பு பொதுப்பணியிலிருந்ததால் தொடர்ந்தும் செய்யவேண்டிய பொதுச் சேவைகளுக்கான செலவுகள்,” என்ற பெயரில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரிகள் ஒவ்வொருவரும் தொடர்ந்தும் வருடாவருடம் சுமார் 115,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை அரசிடமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள்.
தாங்கள் தொடர்ந்தும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளிலும், சேவைகளிலும் பங்கெடுக்கவேண்டிய செலவுகள் [Public Duty Cost Allowance] என்ற பெயரில் 2015 லிருந்து இதுவரை முன்னாள் பிரதமர்கள் மொத்தமாகச் சுமார் 2.5 மில்லியன் பவுண்டுகளை அரசிடமிருந்து பெற்றிருக்கிறார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
அனேகமாக வெளியே நிகழ்ச்சிகளில் தலைகாட்டாத டேவிட் கமரூன் மட்டுமே இதுவரை சுமார் 383,641 பவுண்டுகளை இப்படியான செலவுகளைக் காட்டிப் பெற்றிருக்கிறார். 574,935 பவுண்டுகளையும், அச்சேவைகளுக்குத் தான் பாவித்த உத்தியோகத்தவர்களின் உப செலவுகளையும் சேர்த்துப் பெற்றிருக்கிறார் ஜோன் மேஜர். 574,835 பவுண்டுகளைப் பெற்றிருக்கிறார் டொனி பிளெயர். கோர்டன் பிரௌன் அறவிட்டிருக்கும் தொகை 573,542 பவுண்டுகள் ஆகும்.
பதவி விலகிய பிரதமர்கள் தமது பதவிக்காலத்தின் பின்னரும் தாம் பொதுச் சேவைகளில் பங்குகொள்வதற்காக ஆகும் செலவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டம் மார்கிரட் தட்சரால் தயாரிக்கப்பட்டு அவர் பதவி விலகியபின் 1991 இல் அமுலுக்கு வந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்