செப்டம்பர் 11 ம் திகதிக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்க இராணுவம் முழுவதுமாக வாபஸ் வாங்கப்படலாம்.
2011 இல் 100,000 ஆக இருந்த அமெரிக்காவின் இராணுவம் தற்போதும் 2,500 பேரை ஆப்கானிஸ்தானில் வைத்திருக்கிறது. நடந்துவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் ஒரு நிபந்தனையாக அவர்களை முற்றாக அங்கிருந்து அகற்றுவதை ஜோ பைடன் அரசு செப்டம்பர் 11 க்கு முன்னர் செய்யலாம் என்று தெரியவருகிறது.
டிரம்ப் அரசால் அங்கீகரிக்கப்பட்டு, கத்தாரில் நீண்டகாலமாக இழுபறிகளுடன் நடந்துவரும் ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இவ்வருடம் மே மாதத்தில் அங்கிருக்கும் வெளிநாட்டு இராணுவம் அகற்றப்படும் என்று ஆரம்பத்தில் உறுதி கொடுக்கப்பட்டிருந்தது. அந்தக் கால எல்லையே தற்போது செப்டெம்பர் 11 ஆக மாற்றப்படும் என்று தெரியவருகிறது.
போருக்குத் தயாரான நிலையிலான அக்குறிப்பிட்ட 2,500 இராணுவத்தினரும் அங்கிருந்து அகற்றப்படுவதாகக் குறிப்பிடப்பட்டாலும் ஒரு சிறிய தொகையில் அமெரிக்க இராணுவத்தினர் தொடர்ந்தும் அங்கே இருப்பார்கள். அங்கிருக்கும் ராஜதந்திர அதிகாரிகளுக்குப் பாதுகாப்பளிப்பது அவர்களுடைய பொறுப்பாக இருக்கும்.
ஆப்கானிஸ்தானிலிருந்து இராணுவம் அகற்றப்படுவதைப் பற்றிய அறிவிப்பை இன்று அமெரிக்காவிலும், நாட்டோவின் தலைமை அலுவலகத்திலும் வெளியிடுவார்கள் என்று தெரியவருகிறது. அமெரிக்க இராணுவம் அங்கிருந்து அகலுமானால் உடனிணைந்து செயற்படும் நாட்டோவின் இராணுவமும் அகலும் என்பதால் இரண்டு பகுதியாரும் சேர்ந்தே இராணுவத்தினரை வெளியேற்றுவார்கள் என்று தெரிகிறது.
அமெரிக்கப் படைகளை வாபஸ் வாங்குவது ஆரம்பத்திலிருந்தே டொனால்ட் டிரம்ப்பின் திட்டமாக இருப்பினும் அவரது கட்சியினர் அன்றும், இப்போது, தொடர்ந்தும் அதை எதிர்த்தே வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்