திரிபுத் தொற்றுத் தீவிரம்! பிறேசில் விமானங்களை இடைநிறுத்தியது பிரான்ஸ்.
பிரான்ஸ் – பிறேசில் இடையிலான விமான சேவைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்படுவதாக பிரதமர் Jean Castex அறிவித்திருக்கிறார். பிறேசிலில் இருந்து வருகின்றவர்கள் எவரும் வைரஸ் பரிசோதனை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் பத்து நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிறேசில் வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதால் ஏனைய நாடுகளைப் பின்பற்றி பிரான்ஸும் அந்நாட்டுடனான போக்குவரத்துகளை நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம். பிக்கள் நாடாளுமன்றத்தில் கோரியிருந்தனர்.
பிறேசிலிலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் மாறுபாடடைந்த திரிபு அந்த நாட்டையும் அயல் நாடுகளை
யும் தாண்டி உலகெங்கும் தீவிரமாகப் பரவி வருகிறது.
இங்கிலாந்து வைரஸ் ஏற்படுத்திய தீவிர தொற்றலை தணிவதற்கு முன்பாகவே பிறேசில் வைரஸ் திரிபு பல நாடுகளுக்கும் பரவிவிட்டது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பிறேசில் வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். P1 எனப் பெயரிடப்பட்ட பிறேசில் வைரஸின் தொற்றும் திறன் பிரான்ஸின் மருத்துவர்களை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.
பிறேசிலில் புதிய திரிபு தொற்றினால் கடந்த மார்ச் மாதம் மட்டும் 66 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு நிலைமை கையை மீறி உள்ளது. நாளாந்தம் 4 ஆயிரம் பேர் என்ற கணக்கில் உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன.
தொற்று அதிகம் உள்ள அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுடன் முன்னணியில் விளங்கும் பிறேசிலில் இதுவரை மொத்தம் 3லட்சத்து 51 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர்.
குமாரதாஸன். பாரிஸ்.