கட்டத் தொடங்கிய வீதியை நடுவழியிலேயே விட்டுவிட்டுப் போய்விடுமா சீனா என்று தவிக்கிறது மொன்ரிநீக்ரோ.
எல்லா வழிகள் மூலமாகவும் ஐரோப்பாவுக்குள்ளும் காலூன்ற முயன்று வரும் சீனாவின் தூண்டிலில் மாட்டிக்கொண்டிருக்கிறது குட்டி பால்கன் நாடான மொன்ரிநீக்ரோ. அரை மில்லியன் மக்களை மட்டும் கொண்ட 2006 இல் சுதந்திரமடைந்த மொன்ரிநீக்ரோ பக்கத்துச் சகோதர நாடான செர்பியாவை இணைக்க ஒரு முக்கிய வீதியைக் கட்ட ஆரம்பித்து அளவுக்கு மேல் சீனாவிடம் கடனை வாங்கிவிட்டு வீதியையும் கட்டி முடிக்க இயலாமல் தவிக்கிறது.
Bar-Boljare வீதி என்றழைக்கப்படும் பெயரில் மொன்ரிநீக்ரோவின் Bar என்ற துறைமுக நகரத்தை செர்பியாவின் Boljare என்ற தனது எல்லை நகருடன் இணைக்கும் சுமார் 165 கி.மீ வீதியைக் கட்டி வருகிறது மலை நாடான மொன்ரிநீக்ரோ. இவ்வீதியில் 48 குகைகளும் 147 பாலங்கள், மேம்பாலங்கள் கட்டப்படும். இதற்கான செலவு 809 மில்லியன் எவ்ரோக்களாகும் என்று கணிக்கப்பட்டது.
மொன்ரிநீக்ரோ என்ற ஏற்கனவே பொருளாதார ஸ்திரமில்லாத நாட்டுக்கு அந்த வீதி எந்த வகையிலும் தேவையானதல்ல என்று ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி உட்படப் பலர் எச்சரித்தும், கண்டித்தும் கூட சில அரசியல் தலைவர்கள் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வதற்காக அந்த வீதியைக் கட்ட முடிவுசெய்தார்கள். அந்த வீதியில் எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து இருக்காது என்றும் கணிப்பிடப்பட்டது. எனவே எவரும் கடன் கொடுக்காத நிலையில் சீனாவின் Exim Bank முதல் கட்ட வீதியான 41 கி.மீற்றருக்கான கடனைக் கொடுக்க முன்வந்தது. கட்டுமானப் பணிகளைச் சீன அரசின் Road and Bridge Corporation எடுக்கும் என்ற நிபந்தனையுடன். அந்த வீதி உலகின் மிகப்பெரும் செலவில் கட்டப்படும் வீதியென்ற பெயரையும் பெற்றது.
2014 இல் ஆரம்பித்த வீதியின் முதல் 41 கி.மீ முடியுமுன்னரே கொரோனாத் தொற்றுக்கள் ஆரம்பித்துவிட்டன. கட்டுமானப் பணியிலீடுபடும் பெரும்பாலானவர்கள் சீனத் தொழிலாளர்கள். கொரோனாக் கட்டுப்பாடுகளால் அவர்கள் மொன்ரிநீக்ரோவுக்குள் நுழைவதில் பிரச்சினைகள் ஒரு பக்கம். இன்னொரு பக்கத்தில் சீனாவிடம் வாங்கிய கடனை நேரத்தில் கட்டமுடியாத மொன்ரிநீக்ரோவின் நிலை. கெஞ்சிக் கூத்தாடித் தனது கடனை அடைக்கக் கெடுவை நீடித்திருந்தாலும் அதற்கான பணம் மொன்ரிநீக்ரோவிடம் இல்லை.
கடனின் ஒரு பகுதியை நேரத்தில் கட்டமுடியாத அந்த நாட்டின் வேறு சொத்துக்களைச் சீனா கையகப்படுத்திக்கொள்ளக்கூடுமென்ற நிலையில் மொன்ரிநீக்ரோ ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையேந்தி நிற்கிறது. மிகப் பெரிய கடனாளி நாடான மொன்ரிநீக்ரோவின் நாலிலொருபங்கு கடன் சீனாவுக்கு வீதிக்கட்டுமானத்துக்காகக் கொடுக்கவேண்டியதாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விண்ணப்பம் கொடுத்திருக்கும் மொன்ரிநீக்ரோ எப்போ சேருமென்பது இன்னும் தெரியாத நிலை.
“நீங்கள் வேறு ஆட்களிடம் வாங்கிய கடனை அடைக்க நாம் கடன் கொடுக்க முடியாது,” என்று பதிலளித்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். “தனது பலத்தை ஐரோப்பாவுக்குள் அதிகரிக்கும் எண்ணத்துடன் இப்படியான திட்டங்களுக்கு உதவக் கைநீட்டும் சீனாவை வெளியே வைக்க எங்களுக்கு உதவுங்கள் என்கிறது,” மொன்ரிநீக்ரோ.
திட்டமிட்ட வீதியின் மீதிப்பாகத்தைக் கட்டி முடிக்க உதவலாம் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோடி காட்டுகிறது. ஆனால், முதலில் சீனாவின் கடனை அடைக்கவேண்டியது மொன்ரிநீக்ரோவின் கட்டாயம்.
சாள்ஸ் ஜெ. போமன்