Featured Articlesசெய்திகள்விளையாட்டு

“இன-அழிப்பு ஒலிம்பிக்ஸ்” புறக்கணிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கை வலுக்கிறது.

அடுத்த பனிக்கால ஒலிம்பிக்ஸ் பெப்ரவரி 04 2022 இல் பீஜிங்கில் ஆரம்பமாகவிருக்கிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்ரேலியா ஆகிய நாடுகள் அந்த விளையாட்டுப் போட்டிகளைப் புறக்கணிக்கலாம் என்ற செய்திகள் கசிந்து வருகின்றன. சர்வதேச அளவில் 180 மனித உரிமை அமைப்புக்கள் அந்தப் புறக்கணிப்புக்காக அறைகூவல் விடுத்திருப்பதையடுத்தே இச்செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஷின்ஷியாங் மாகாணத்தில்  “திருத்தும்” முகாம்களை வைத்திருக்கும் சிறுபான்மையினரான உகூரரை சீன அரசு நடாத்தும் முறைகள், ஹொங்கொங், தாய்வான் ஆகிய பிராந்தியங்களில் சீனா நடாத்திவரும் ஜனநாயக அத்துமீறல்கள் ஆகியவற்றை எதிர்க்கும் வகையாகவே சீனாவில் நடக்கப்போகும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளைப் புறக்கணிக்கவேண்டுமென்று குரலெழுப்பப்படுகிறது.

சீனா திபெத் பிராந்தியத்தில் வாழும் மக்களின் பல உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வருவதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.  நடக்கவிருக்கும் பந்தயங்களின் மூலம் சீனா தனது மனித உரிமை மீறல்களைப் பெருமையுடன் விளம்பரப்படுத்த அனுமதிக்கலாகாது என்று அறைகூவல் விடப்படுகிறது.

சீனாவிடமிருந்து போட்டிகளைப் பறித்தெடுப்பதாலோ, புறக்கணிப்பதாலோ எவ்வித பிரயோசனங்களும் இருக்கப்போவதில்லை, என்று சர்வதேச ஒலிம்பிக்ஸ் அமைப்பு குறிப்பிடுகிறது. “சீனாவுக்கு ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளை நடாத்தும் அனுமதியைக் கொடுக்கக் காரணம் அவர்களுடைய அரசு செய்வதையெல்லாம் ஆதரிப்பதாக அர்த்தமில்லை,” என்று சுட்டிக் காட்டப்படுகிறது. 

பீஜிங் ஒலிம்பிக்ஸ் புறக்கணிப்பைப்பற்றித் தாம் தமது நட்பு நாடுகளுடன் ஆலோசித்து வருவதாக அறிக்கை விட்ட அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சரின் காரியதரிசி அதைப் பின்பு வாபஸ் வாங்கிக்கொண்டார். ஏற்கனவே சீனாவுடன் அரசியல் இழுபறியிலிருக்கும் கனடா, ஆஸ்ரேலியா ஆகிய நாடுகள் அப்படியான திட்டம் தொடர்ந்தும் இருக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது. ஹொங்கொங் விவகாரத்தில் சீனாவுடன் எதிர்ப்பாக இருக்கும் பிரிட்டனும் அப்படியான ஒரு எண்ணத்தை இன்னும் முழுவதுமாக மறுக்கவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *