தனது ஒழுங்கற்ற, நிலைமாறும் அகதிகள் பற்றிய நிலைப்பாடுகளுக்காக ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறார்.
டெமொகிரடிக் கட்சியினரில் பலர் ஜோ பைடன் மீது காட்டமாகிக்கொண்டிருக்கிறர்கள். அவைகளில் முக்கியமானதொன்றாக இருப்பது அமெரிக்காவின் அகதிகள் அனுமதி பற்றிய முடிவுகளாகும். ஏற்கனவே தெற்கு எல்லையில் அனுமதியின்றிப் புகுந்துவருபவர்களால் உண்டாகியிருக்கும் ஒழுங்கின்மையால் அமெரிக்க அரசு தவிப்புக்குள்ளாகியிருக்கிறது. ஆனால், அனுமதியுடன் அமெரிக்காவுக்குள் ஏற்றுக்கொள்ளப்படும் அகதிகளின் எண்ணிக்கை பற்றிய ஜோ பைடனின் உறுதிப்பாடும் மாறி வருவதாகத் தெரிகிறது.
டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சியில் அமெரிக்காவுக்குள் ஏற்றுக்கொள்ளப்படும் அனுமதிக்கப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை 15,000 ஆகக் குறைக்கப்பட்டது. [அனுமதிக்கப்பட்ட அகதிகள் ஏற்கனவே ஐ.நாவின் அகதிகள் அமைப்பின் அகதிகள் முகாம்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்] தேர்தல் வாக்குறுதிகளிலொன்றாக அந்தத் தொகையை மீண்டும் அதிகரிப்பது என்று குறிப்பிடப்பட்டது. 62,500 அகதிகளை ஏற்பதாக டெமொகிரட்சிக் கட்சியினர் குறிப்பிட்டிருந்தார்கள்.
ஆனால், தொடர்ந்தும் 15,000 பேரையே ஏற்றுக்கொள்வது என்று அதை மாற்றிக்கொள்ள ஜோ பைடன் திட்டமிட்டிருந்த குறிப்புக்கள் இரகசியமாக வெளியே கசிந்துவிட்டதால் கட்சிக்குள் பலர் கோபமடைந்திருக்கிறார்கள். அவ்விபரங்கள் சமீப நாட்களில் அமெரிக்காவின் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டுக் கடுமையாகச் சாடப்பட்டன. அதனால் மீண்டும் பைடன் அத்தொகையை அதிகரிப்பதாகக் கட்சியினருக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்.
மே 15 ம் திகதி அதுபற்றியத் தெளிவான முடிவை எடுத்து இலக்கத்தை அறிவிப்பதாக பைடன் உறுதிகொடுத்திருக்கிறார். உள் நாட்டு அரசியல் நிலைமையே ஜோ பைடனின் இந்தத் தளம்பல்களுக்குக் காரணம் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது டெக்ஸாஸ் எல்லையில் வந்து தஞ்சம் கோருபவர்களால் நாட்டின் ஒரு பகுதியினரிடையே குடியேற வருபவர்கள் மீதான அலுப்பும், கோபமுமாகும். ரிபப்ளிகன் கட்சிக்காரரும் சமீப வாரங்களில் அதைச் சுட்டிக்காட்டி ஜோ பைடனின் அரசியல் கையாளலைச் சாடி வருகிறார்கள். அவர்களுடைய ஆதரவை இழக்க விரும்பாததால் ஜோ பைடன் அகதிகள், தஞ்சம் புக வருகிறவர்கள் பற்றிய நிலைப்பாட்டில் தளம்பி வருகிறார் என்று கணிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்