உயிருள்ள பசுக்களை வெளிநாடுகளுக்கு நீர்வழி மூலமாக ஏற்றுமதி செய்வதை நியூசிலாந்து தடை செய்கிறது.
கடந்த வருடம் நியூசிலாந்திலிருந்து சீனாவுக்குக் கப்பலில் கொண்டுசெல்லப்பட்ட 6,000 பசுக்கள் கப்பலுடன் கடலுள் மூழ்கியது. அதைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படும் அம்மிருகங்கள் தமது போக்குவரத்தில் எந்த நிலபரத்தை அனுபவிக்கின்றன என்பது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. அப்பசுக்களுடன் கப்பலிலிருந்த 43 மாலுமிகளில் 41 பேர் இறந்தார்கள்.
அந்தச் சம்பவத்தின் பின்னர் மிருகங்களின் நலன் பற்றி உண்டாகிய விமர்சனங்களை ஆராய்ந்ததிலிருந்தே இந்த முடிவை எடுத்திருப்பதாக நியூசிலாந்து அரசு அறிவித்திருக்கிறது. கப்பல்களில் கொண்டுசெல்லப்படும் மிருகங்கள் மிகவும் மோசமான சூழலையே கப்பலில் எதிர்கொள்கின்றன என்று குறிப்பிடப்படுகிறது. நியூசிலாந்திலிருந்து கப்பல்களில் மிருகங்கள் சீனாவைச் சென்றடைய இருபது நாட்களாகின்றன.
நியூசிலாந்தின் கடல் மூலமான பசுக்களும், கன்றுகளும் மிகப் பெரும்பாலும் சீனாவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 110,000 பசுக்களும், கன்றுகளும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. அவை பசுப்பண்ணைகளில் வளர்ப்பதற்காகச் சீனாவால் கொள்வனவு செய்யப்படுகின்றன.
தமது இந்த நடவடிக்கையைச் சீனா தான் நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யும் இறைச்சி மற்றும் பால்ப்பொருட்களின் மேல் இறக்குமதி வரிகள் போட்டுத் தண்டிக்கச் சந்தர்ப்பம் இருப்பதாக நியூசிலாந்து அஞ்சுகிறது.
இந்த முடிவு இரண்டு வருடங்களில் அமுலுக்கு வரும். தமது முடிவைப் போலவே மற்றைய நாடுகளும் மிருகவதையைத் தடுப்பதற்காக எடுக்கவேண்டுமென்று நியூசிலாந்து அரசு எதிர்பார்க்கிறது.
சாள்ஸ் ஜெ.போமன்