இந்தியத் தலைநகரத்தின் கொரோனாத் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்து ஒரு வாரத்துக்கு ஊரடங்குச் சட்டம்.
இந்தியாவின் பல பாகங்களிலும் கொரோனாத் தொற்றுக்கள் காட்டுத்தீ போன்று பரவிக்கொண்டிருக்கின்றன. சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் தொற்றுக்கள் ஆரம்பித்தபோதிருந்ததை விட நிலைமை சில மாநிலங்களில் மோசமாகியிருக்கிறது. அவைகளிலொன்று தலைநகரமான நியூடெல்கி. தினசரி 25,000 புதிய தொற்றுக்கள், அவசரகாலச் சிகிச்சைக்கான மருத்துவசாலை இடங்கள் நிறைந்து வழியும் நிலமை ஆகியவை நகரில் ஒரு வாரம் பொதுமுடக்கத்தை அமுல்படுத்தவைத்திருக்கின்றன.
சனியன்று நியூடெல்லியில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அது அப்பிராந்தியம் முழுவதையும் மக்களை அவதிப்பட வைத்தது. அவசர அவசரமாக மக்கள் தமது காரியங்களைச் செய்வதில் முனைந்தனர். வெளிமாநிலத்திலிருந்து வேலைக்கு வந்தவர்கள் நெருக்கியடித்துக்கொண்டு போக்குவரத்து நிலையங்களை முற்றுக்கையிட்டனர்.
நிலைமையச் சமாளிக்க நியூடெல்லி அரசு படு வேகமாக திங்களன்றிலிருந்து ஒரு வாரத்துக்குப் பொது முடக்கத்தை அறிவித்திருக்கிறது. “இந்தப் பொதுமுடக்கத்தை அமுலுக்குக் கொண்டுவராவிடில் நிலைமையை எவராலும் கட்டுப்படுத்த முடியாது. ஏகப்பட்ட மனிதர்கள் தொற்றுக்களால் மடியும் நிலைமை ஏற்படும்,” என்று நியூ டெல்லி அரசு தனது 21 மில்லியன் மக்களையும் வீட்டுக்குள்ளிருக்கவைக்கும் அறிவிப்புக்குக் காரணத்தை விளக்கியிருக்கிறது.
சமீபத்தைய கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்காததற்காக மோடி அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. அந்த நிலைமையைச் சமாளிக்க மே முதலாம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோரெல்லோருக்கும் கொவிட் 19 தடுப்பூசிகள் கொடுக்கப்படும் என்று இந்திய அரசு அவசர அவசரமாகத் திங்களன்று அறிவித்தது.
தடுப்பு மருந்துகளோ நாடெங்கும் தாராளமாகக் கிடைக்காது என்பதே நிலைமை. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தங்களிடம் தேவையான அளவில் தடுப்பு மருந்துகள் இல்லை என்ற செய்தியும், இருப்பவை ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் என்ற செய்தியும் வந்துகொண்டிருக்கின்றன.
கொவிஷீல்ட் என்ற பெயரில் இந்தியாவில் கொடுக்கப்படும் அஸ்ரா செனகா நிறுவனத்தின் தடுப்பூசியே பொதுவாகப் பலராலும் விரும்பப்பட்டு வந்தது. அதைத் தவிர கொவக்ஸின் எனப்படும் இந்தியத் தடுப்பூசியும் கொடுக்கப்பட்டு வருகிறது. கொவிஷீல்ட் தடுப்பு மருந்துகளின் கையிருப்புப் பெரிதும் குறைந்திருப்பதால், தற்போது பல நகரங்களிலும் இரண்டாவது தடுப்பூசியாக கொவக்ஸின் கொடுக்கப்பட ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
தடுப்பு மருந்துத் தயாரிப்பாளர்கள் தங்கள் பங்குக்குப் பல தயாரிப்புப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். முதலீடு போதாமை, தடுப்பூசித் தயாரிப்புக்கான அடிப்படைப் பொருட்கள், தளபாடங்கள் போதாமையால் தம்மால் தயாரிப்பை உயர்த்த முடியவில்லை என்று அவர்கள் குறைப்பட்டு வருகிறார்கள்.
செரும் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகியவைக்குத் தயாரிப்பை உயர்த்துவதற்காக 4,500 கோடி ரூபாய்களைக் கொடுத்து உதவுவது என்று செவ்வாயன்று இந்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. ஜூலை மாதத்தில் 200 மில்லியன் தடுப்பூசிகளை செரும் இன்ஸ்டிடியூட்டும், 90 மில்லியன் தடுப்பூசிகளை பாரத் பயோடெக்கும் இந்திய அரசுக்கு தலா 150 ரூபாய் விலைக்கு வழங்குவதாக ஒப்புக்கொண்டிருக்கின்றன.
அதைத் தவிர தனியார் மருந்துவமனைகள் நேரடியாகவே தயாரிப்பாளர்களிடம் தமது தேவைக்கேற்றபடி வாங்கும் ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளலாம். தயாரிப்பாளர்கள் இந்திய அரசுக்குத் தமது தயாரிப்பின் 50 % ஐயும் மிச்சத்தை வேறு வழிகள் மூலமும் விற்கலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்