எத்தியோப்பியாவின் மற்றைய பாகங்களிலும் ஆங்காங்கே எல்லை மற்றும் இனக்கலவரங்கள் வெடிக்கின்றன.
நோபலின் அமைதிப் பரிசு பெற்ற எத்தியோப்பிய பிரதமரின் அரசியலுக்கெதிராக நாட்டின் பல பாகங்களிலும் இனங்களுக்குள் மோதல்கள் அதிகரித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த நாட்களில் திகிராய் மாநிலத்தின் எல்லை மாநிலமான அம்ஹாராவின் நகரங்களில் கலவரங்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியான அத்தையே பகுதியில் நடந்த கலவரங்களில் பலர் இறந்திருப்பதால் மாநிலத்தின் தென் பகுதியில் ஊரடங்குச் சட்டங்கள் போடப்பட்டு இராணுவத்தின் பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டிருப்பதாக எத்தியோப்பியா அறிவிக்கிறது.
எத்தியோப்பியாவின் பல இன மக்களில் முதலிரண்டு பெரும்பான்மையானவர்கள் அம்ஹாராக்களும், ஒரோமோக்களுமாகும். அவ்விரண்டு இனத்தினரும் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்கள் இருக்கின்றன. அம்ஹாரா மாநிலத்தின் குறிப்பிட்ட பிராந்தியத்தில் செறிவாக வாழும் ஒரோமோக்கள் மீது அம்ஹாரா இனத்தவர் நடாத்தும் தாக்குதல்களாலேயே இந்த இனக்கலவரம் எழுந்திருக்கிறது. ஏற்கனவே 300 பேருக்கும் அதிகமானவர்கள் இதில் இறந்திருப்பதாக அரசு தெரிவிக்கிறது.
ஏற்கனவே பக்கத்திலிருக்கும் திகிராய் மாநிலத்தினருடன் போரிலிருக்கும் எத்தியோப்பியாவின் அம்ஹாரா மாநிலத்தில் மட்டுமன்றி மற்றைய மாநிலங்களிலும் வெவ்வேறு இனத்தவர்களிடையே புகைந்துகொண்டிருக்கிறது. பத்து இனங்கள் கொண்ட பத்து மாநிலங்களைக் கொண்ட எத்தியோப்பியாவின் பிரதமர் ஒரு ஒரோமோ இனத்தவராகும். இவரது இனத்தவருக்கும் அம்ஹாராக்களுக்குமிடையே நீண்ட காலமாகவே அதிகாரம் பற்றிய போர் நிலவிவந்திருக்கிறது.
பெனிஷான்குல் குமுஸ் மாநிலத்திலும் இனத்தவர்களுக்கிடையேயான மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் சமீப வாரங்களில் உயிரிழந்திருக்கிறார்கள். சோமாலியாவை அடுத்திருக்கும் சோமாலி மாநிலத்தின் எல்லைகளிலும் ஒருவரையொருவர் தாக்கிவருகிறார்கள். அது தவிர சோமாலி மா நிலத்தினர் தமது வட எல்லையிலிருக்கும் அபார் மாநிலத்தினருடன் எல்லைகள் பற்றிய தகராறுகளில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்