பாகிஸ்தானில் சீனத் தூதுவர் தங்கியிருந்த ஹோட்டலில் குண்டு வெடிப்பு. நால்வர் இறப்பு.
பாகிஸ்தானில், பலூச்சிஸ்தான் மாநிலத்தில் கெத்தா என்ற நகரிலிருக்கும் முக்கிய ஹோட்டலொன்றில் குண்டு வெடித்தது. சீனாவின் துதுவருடன் நான்கு உதவியாளர்கள் அங்கு தங்கியிருந்தார்கள். அவர் அச்சமயத்தில் வெளியே போயிருந்தார். குண்டு வெடிப்பில் இதுவரை நால்வர் இறந்ததாகவும் பத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிகிறது.
கனிவளங்களால் நிறைந்த பலுச்சிஸ்தானில் மத்திய அரசுக்கெதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. பலூச்சிஸ்தான் விடுதலைப் போராளிகள் பல வருடங்களாகவே ஆயுதமெடுத்துப் போராடி வருகிறார்கள். 2019 இல் துறைமுக நகரமான க்வதாரில் ஒரு ஹோட்டலில் தாக்கி எட்டுப் பேர் கொல்லப்பட்டார்கள். கடந்த ஜூன் மாதத்தில் பாக்கிஸ்தான் பங்குச் சந்தைக் கட்டடம் தாக்கப்பட்டது.
துறைமுகத்தில் பாகிஸ்தான், சீனாவுக்கு மிகவும் முக்கியமான அரபிக் கடல் வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. பாகிஸ்தான் பங்குச் சந்தையை இயக்கும் நிறுவனத்தில் சீனா முக்கிய உரிமையாளராக இருக்கிறது. அவ்விரண்டு தாக்குதல்களையும் தாமே செய்ததாக பலூச்சிஸ்தான் போராளிகள் அறிவித்திருக்கிறார்கள்.
பாகிஸ்தானிய – சீன ஒத்துளைப்புத் திட்டமான China-Pakistan Economic Corridor மூலமாக சீனாவுக்கான பொருளாதார முதலீடுகளுக்குப் பாகிஸ்தான் இடமளித்திருக்கிறது. பலூச்சிஸ்தான் பிராந்தியத்தில் பல திட்டங்களில் இறங்கியிருக்கும் சீனா அப்பகுதியில் தனது தொழிலாளிகளையே பாவித்துக் கனிப்பொருட்களைக் கையாள்கிறது. தமது பிராந்தியத்தின் இயற்கை வளமும், பொருளாதாரப் பலமும் தமக்குக் கிடைக்காததால் பலூச்சிஸ்தானில் சீனாவுக்கெதிரான மனப்போக்கு நிலவிவருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்