ரஷ்ய – உக்ரேன் எல்லையில் தமது இராணுவப் பயிற்சி முடிந்து முகாம்களுக்குத் திரும்புவதாகச் சொல்லும் ரஷ்யா.
சமீப வாரத்தில் சர்வதேச ரீதியில் கடும் பரபரப்பையும், அரசியல் வட்டாரங்களில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது, உக்ரேன் எல்லையில் ரஷ்யா தனது இராணுவத்தைக் குவித்தமையும், போர்ப் பிரகடனங்கள் செய்தமையும். அதற்குக் காரணம் உக்ரேனில் அரசியல் ஸ்திரமின்மை என்று ரஷ்யா குறிப்பிட்டிருந்தாலும்கூட உண்மையான காரணம் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரேனுடன் மோடவேண்டாமென்று ரஷ்யாவை எச்சரித்ததே ஆகும்.
“ஒரு அதிரடிப் போருக்காக எங்கள் இராணுவம், கடற்படை, விமானப்படைகளின் தயார்நிலைமை பற்றி அறிந்துகொள்ள நாம் நடத்திய இராணுவப் பயிற்சிகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டன. அதனால் நாம் எல்லோரையும் முகாமுக்குத் திரும்பக் கட்டளையிட்டிருக்கிறோம்,” பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கு.
தனது துருப்புக்களைத் தன்னிஷ்டப்படி தனது நாட்டின் எல்லைக்குள் மாற்றிக்கொள்வதைப் பற்றி எவரும் கருத்துச் சொல்வதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை, என்கிறது ரஷ்யா. ஓரிரு நாட்களுக்கு முன்னர் தனது வருடாந்தரப் பேச்சு மூலம் மக்களுடன் பேசிய புத்தின் காட்டமான எச்சரிக்கைகளை மேற்கு நாடுகளுக்கும் தெரிவித்தார்.
நாட்டோவின் கூட்டு இராணுவப் பயிற்சியான Defender Europe 2021 ஜூன் மாதம் வரை நடக்கவிருக்கிறது. அப்பயிற்சிகளில் ஒரு பகுதி மே மாதத்தில் ரஷ்ய எல்லைகளிலுள்ள பால்கன் நாடுகளில் நடக்கவிருக்கிறது. தனது கவனத்துக்குரிய பிராந்தியம் என்று ரஷ்யா கருதும் பகுதிகளிலிருக்கும் நாடுகளுடன் மேற்கு நாடுகள் உறவு கொள்ளும்போது தன் பக்கத்துக்குத் தன் சிறகுகளை விரித்துக் காட்ட ரஷ்யா தவறுவதில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்