லெபனான் போதை மருந்துகளைக் கடத்திவருவதாகக் கூறி தமது நாட்டுக்கு அவர்கள் காய்கறிகள், பழங்கள் ஏற்றுமதி செய்வதை சவூதி நிறுத்தியது.
ஏற்கனவே மிகப்பெரும் சமூக, பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துவரும் லெபனான் நாட்டுக்கு மேலுமொரு அடியாக சவூதி அரேபியா அவர்களிடமிருந்து தனது நாட்டுக்கு வரும் காய்கறி, மற்றும் பழவகைகளை வேண்டாமென்று நிறுத்திவிட்டது. அதன் காரணம் சமீபத்தில் லெபனானிலிருந்து சவூதியின் ஜெட்டாவுக்குக் கொண்டுவரப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்ட 5.3 மில்லியன் போதை மருந்துகளாகும்.
சவூதி அரேபியாவின் முடிவு அவர்களுடையே லெபனான் தூதுவராலயம் மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தாம் போதை மருந்துப் போக்குவரத்தைத் தடுப்பதற்காக எல்லா முயற்சிகளையும் எடுத்து, சவூதி அரேபியாவுடன் சேர்ந்து அதைத் தடுப்பதில் உதவுவதாக லெபனானின் தற்காலிக அரசின் உள்துறை அமைச்சர் உறுதி கூறுகிறார். ஞாயின்றன்று காலை முதல் சவூதியும் முடிவு அமுலுக்கு வருகிறது.
சுமார் 24 மில்லியன் டொலர்கள் பெறுமதியுள்ள சவூதி அரேபியாவுடனான காய்கறி, பழங்களாலான வர்த்தகம் தற்போதைய சமயத்தில் லெபனானுக்கு முன்னெப்போதையும் விட முக்கியமானது. குறிப்பிட்ட போதைப் பொருட்கள் சிரியாவிலிருந்து வந்தவையாகவும் இருக்காலம் என்கிறது லெபனான்.
சுமார் இரண்டு வருடங்களாகச் சிதறிவரும் லெபனானின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமானால் நாட்டில் ஒரு ஊழலற்ற ஸ்திரமான அரசு உருவாகவேண்டும். லெபனானின் அதிகார சக்திகள் சுயநல நோக்கத்துடன் எவரையுமே ஒரு அரசை அமைக்க விடாமல் இழுபறி செய்துகொண்டிருக்கும் நிலையைத் தடுக்கவே சவூதி இந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்திருக்கலாமென்று கருதப்படுகிறது.
உலகின் பெரும்பாலான நாடுகளும் சமீப காலத்தில் வர்த்தகத்தில் லெபனானிடமிருந்து ஒதுங்கியிருக்கின்றன. வளைகுடா நாடுகளுடனான வர்த்தகம் மட்டுமே தற்போதைய நிலையில் லெபனானுக்குக் கிடைக்கும் உயிர்ச்சத்தாகும். அங்கிருந்து மட்டுமே அவர்களால் டொலர்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அதை வெட்டிவிடுவதன் மூலம் சவூதி அரேபியா லெபனானின் அதிகார வர்க்கத்தினரை அரசியலில் விட்டுக்கொடுத்து நடக்க நிர்ப்பந்திக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
சவூதி அரேபியாவைப் போலவே குவெய்த்தும் லெபனான் மீது இதே முடிவை எடுக்கத் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்