ஆஸ்ரேலியாவில் ஐம்பது வயதுக்கு உட்பட்டவர்களைக் கொல்லும் வியாதிகளில் முக்கியமான ஒன்றாக மாரடைப்பு.
வருடாவருடம் சுமார் 20,000 பேர் ஆஸ்ரேலியாவில் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் பத்து விகிதமானவர்களே தப்பிப்பிழைக்கிறார்கள். இறப்புக்களில் 30 – 40 விகிதமானவைக்கான காரணங்களை மருத்துவர்களாலேயே விளக்க முடிவதில்லை.
மாரடைப்பு என்பது இருதயத் துடிப்புக்குத் தேவையான இரத்தம் பாய்ச்சப்பட முடியாமல் தடைப்படுவதாகும். திடீர் மாரடைப்பு என்பது இருதயச் செயற்பாடு பிழையாகித் திடீரென்று நின்றுவிடுவதாகும். 50 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 2,000 பேர் அப்படியான திடீர் மாரடைப்பு வந்து வருடாவருடம் இறந்துவிடுகிறார்கள். அதனால் ஆஸ்ரேலிய பொருளாதாரத்துக்கு ஏற்படும் இழப்பு சுமார் 2 பில்லியன் ஆஸ்ரேலிய டொலர்கள் என்று கணக்கிடப்படுகிறது.
விக்டோரியா மாநிலத்தில் 2017 – 2018 ஆண்டுகளில் இறந்த 4,637 பேர்களிடையே பேக்கர் இன்ஸ்ட்டிடியூட்டால் இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில் 15 விகிதமானவர்கள் மட்டுமே மருத்துவாசாலைக்கு எடுத்துச் செல்லப்படுமளவுக்குத் தப்பியிருக்கிறார்கள். அங்கிருந்து சிகிச்சை பெற்று வெளியேறியோர் 325 பேர் அதாவது 7 % மட்டுமே.
சாள்ஸ் ஜெ. போமன்