இந்தியாவின் கொவிட் 19 பரீட்சைகள் நம்பத்தகுந்தவையல்ல என்று குற்றஞ்சாட்டுகிறார் மேற்கு ஆஸ்ரேலிய முதலமைச்சர்.
மேற்கு ஆஸ்ரேலியாவின் முதலமைச்சர் மார்க் மக்கோவன் “இந்தியாவில் நடத்தப்படும் கொவிட் 19 பரீட்சைகள் தெளிவில்லாதவை அல்லது தவறானவை,” என்று குறிப்பிடுகிறார். இந்தியாவிலிருந்து பேர்த் நகருக்குத் திரும்பிய நாலு பேரிடம் கொரோனாத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே அவரது குற்றச்சாட்டு வெளியாகியிருக்கிறது.
“சமீப நாட்களில் இந்தியாவிலிருந்து சுமார் 79 பேர் வந்திருப்பதாக இன்று காலை அறிந்துகொண்டேன். அவர்களிடையே இருக்கும் கொரோனாத்தொற்றுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே மக்கள் ஆரோக்கிய அதிகாரிகளிடமிருந்து அறியமுடிகிறது. இதுபற்றி இந்தியாவுடன் எங்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது,” என்று மக்கோவன் குறிப்பிட்டிருக்கிறார்.
சமீபத்தில் பெர்த் நகரில் கொரோனாத் தொற்றுக்கள் பரவுவதற்குக் காரணமாக இருந்த நபர் கல்யாண வீடொன்றுக்காக இந்தியாவுக்குப் போய்வர விசேட அனுமதி பெற்றுக்கொண்டு போய்வந்த ஒருவரென்று தெரியவருகிறது. இந்தியாவுக்குப் போகிறவர்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும்படி அதிகாரிகளிடம் தான் உத்தரவிட்டிருப்பதாக மக்கோவன் தெரிவித்திருக்கிறார். அத்துடன் இந்தியாவிலிருந்து எந்த விமானத்தையும் அங்கே வர அனுமதி கொடுக்கவேண்டாமென்றும் அவர் கேட்டுக்கொள்கிறார்.
சந்தேகத்துக்குரிய, நம்பிக்கையில்லாத கொரோனாப் பரீட்சை முடிவுகளுடன் ஆஸ்ரேலியாவுக்கு வரும் இந்தியப் பயணிகளால் தமது நாட்டின் கொரோனாக் கட்டுப்பாடுகளின் வலிமை பலவீனமாகிறது. அதனால், ஆஸ்ரேலியாவுக்குப் பிரச்சினையுண்டாகிறது. தினசரி இலட்சக்கணக்கானோர் கொரோனாத்தொற்றால் பாதிக்கப்படும் இந்தியாவுக்கு இச்சமயத்தில் எவராவது போகவேண்டுமென்றால் அதற்கு மிக மிக அவசியமான காரணங்கள் இருக்கவேண்டும். என்று சுட்டிக்காட்டிய அவர் ஆஸ்ரேலியாவிலிருந்து இந்தியாவுக்குப் போகவேண்டாமென்று கேட்டுக்கொண்டார். “அத்தியாவசிய காரணங்களன்றி வேறெதுக்காகவும் எவரையும் நாம் அங்கே பயணிக்க அனுமதிக்கப்போவதில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுபற்றி ஆஸ்ரேலியாவின் உள்விவகார அமைச்சர் காரன் ஆண்டர்ஸும் கருத்துத் தெரிவித்திருக்கிறார். “எங்களுடைய முதல் முக்கிய கடமை ஆஸ்ரேலியர்களைப் பாதுகாப்பாகக் கவனித்துக்கொள்வதுதான். அதைத்தான் எங்களால் செய்யமுடியும். ஆஸ்ரேலியாவுக்குத் திரும்பி வருபவர்களுக்கான உதவிகளையும் நாம் செய்வோம். இந்தியாவுக்கு இந்த மோசமான தருணத்தில் மருத்துவ சேவை உபகரணங்கள் போன்றவைகளை அனுப்பி உதவவே எங்களால் முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து ஆஸ்ரேலியாவின் பிரதமர் ஸ்கொட் மொரிஸன் உடனடியாக இந்தியாவிலிருந்து விமானங்கள் அனைத்தையும் மே 15 ம் திகதிவரை தடுத்து உத்தரவிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்