பைசர் நிறுவனத்தின் கொமிர்நாட்டி தடுப்பு மருந்து பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்கான பச்சைக் கொடியை எதிர்பார்த்து நிற்கிறது
12 – 15 வயதுக்குட்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படுவதற்கான அனுமதியை அமெரிக்க தடுப்பு மருந்து அதிகாரத்திடம் எதிர்பார்த்து நிற்கிறது Pfizer/Biontech நிறுவனத்தின் கொமிர்நாட்டி. அதேபோலவே அத்தடுப்பு மருந்து ஐரோப்பிய ஒன்றியத்திலும் அனுமதியை எதிர்பார்க்கிறது.
குறிப்பிட்ட வயதுக்குட்பட்டவர்களிடையே பரீட்சாத்தமான தடுப்பூசிகளைக் கொடுத்ததில் அது 100 % பாதுகாப்பைக் கொடுத்ததாகத் தெரிகிறது. 2,000 பிள்ளைகள் பங்குபற்றிய அந்த ஆராய்ச்சியில் அவர்கள் அதே மருந்தைப் பெற்ற வயதுவந்தவர்கள் பெற்ற பக்கவிளைவுகள் தவிர வேறு பக்கவிளைவுகளெதையும் பெறவில்லை என்று தெரியவருகிறது.
கொமிர்நாட்டி தடுப்பு மருந்தானது மிக விரைவில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் பாவனைக்கு அனுமதிக்கப்படுமென்ற எதிர்பார்ப்புடன் அதை வரும் கோடைகாலத்தினுள் பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் அவ்வயதுப் பிள்ளைகளுக்கு விரைவில் தடுப்பூசிகளைக் கொடுத்து இலையுதிர்காலத்தில் பாடசாலைகள் தொடங்குமுன் அவர்களைத் தயாராக்கிவிடலாமென்ற திட்டத்தில் மருத்துவ சேவையினர் தயாராகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்