பிரதமர் போரிஸ் ஜோன்சன் வாழ்ந்துவரும் உத்தியோகபூர்வமான வீட்டைப் புதுப்பித்தது யாரென்பது பிரிட்டனில் இப்போது பெரும் கேள்வி!
பிரிட்டிஷ் பிரதமர் தான் உத்தியோகபூர்வமாக வாழும் வீடு புதுப்பிக்கப்பட்டபோது அதற்கான செலவைக் கட்சியா, அல்லது கட்சியின் ஆதரவாளர்களா கொடுத்தார்கள் என்பது பிரிட்டனின் பாராளுமன்றத்தில் கொதிக்கும் கேள்வியாக எழுப்பப்பட்டிருக்கிறது. காரணம், அச்செலவைப் பொறுப்பேற்கும்படி பிரதமர் ஜோன்சன் தனது கட்சியின் சில விசிறிகளைக் கேட்டிருப்பதாக எழுந்திருக்கும் சந்தேகமாகும்.
இதுபற்றிப் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்குப் பதிலாக “நான் தான் அதற்கான முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டேன்,” என்று ஜோன்சன் பதிலளித்து அதையே மீண்டும், மீண்டும் சொல்கிறார். “அதற்கான செலவை முதலில் கொடுத்தது யார், பணம் எங்கிருந்து வந்தது?” என்று எதிர்க்கட்சியினரின் கேள்வி எழுகிறது.
நிலைமை முற்றிப்போய் பிரிட்டனின் தேர்தல் ஆணையம் அச்செலவுகள் பற்றி ஆராயப் போவதாக அறிவித்திருக்கிறது. அச்செலவுகளில் “சந்தேகத்துக்குரிய, தெளிவில்லாத விடயங்கள்” இருப்பதாகச் சொல்லியே அது பற்றி விபரமாக அவர்கள் அலசி ஆராயவிருப்பதாகத் தெரிகிறது.
அத்துடன் பிரிட்டிஷ் பிரதமர் “அடுக்கடுக்காக இறந்த உடல்கள் அடுக்கப்பட்டிருந்தாலும் பறவாயில்லை, பொது முடக்கம் செய்ய உடன்படமாட்டேன்,” என்று படு வேகமாகக் கொரோனாத் தொற்றுகள் பரவி, இறப்புக்கள் நடந்துகொண்டிருந்தபோது குறிப்பிட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதையும் முழுவதாக மறுக்கிறார் ஜோன்சன். ஆனால், அவ்வார்த்தைகளை ஜோன்சன் பாவித்ததை, நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் மூலமாக அறிந்ததாக மூன்று ஊடகங்கள் அடித்துச் சொல்கின்றன. இதுவரை அவ்விபரங்கள் வெளியிடப்படவில்லை.
“எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது தெரிந்துகொண்டே பொய் சொல்வது தெரியவந்தால் அவர் தானாகவே பதவியிறங்கவேண்டும், என்பதை ஞாபகமூட்டுகிறேன்,” என்று லேபர் கட்சியின் தலைவர் கியர் ஸ்ராமர் ஜோன்சனை எச்சரிக்கிறார். ஜோன்சன் அதைச் சொன்னதைக் கேட்டவர்களின் விபரங்களை அவர் இன்னும் வெளியிடவில்லை.
இக்கேள்விகள் சூறாவளியாக இச்சமயத்தில் சுற்றக் காரணம் மே 6 ம் திகதி 145 பிரிட்டிஷ் நகர, மாநகர சபைகளுக்கான தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. தேர்தல் ஆணையமும் ஜோன்சனின் வீட்டுக்கான திருத்தச் செலவுகள் பற்றிய சந்தேகங்களை எழுப்பியிருப்பது அவருடைய கட்சிக்கு மிகப்பெரும் தலையிடியாக எழுந்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்