சனியன்று ஆசியான் மாநாட்டில் சக தலைவர்களுக்குக் கொடுத்த வாக்கை ஏற்கனவே மீறியது மியான்மார் இராணுவத் தலைமை.
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பான ஆசியான் சனியன்று ஜாகர்த்தாலில் கூடி மியான்மாரின் நிலைமை பற்றிக் கலந்தாலோசித்தபோது இராணுவத்தின் தளபதி மின் அவுங் லாயிங் தனது நாட்டு மக்கள் மீது அராஜ்கத்தைப் பாவிப்பது நிறுத்தப்படவேண்டுமென்று கோரிக்கை விடப்பட்டது. அதை மின் அவுங் லாயிங் ஏற்றுக்கொண்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த உறுதி ஏற்கனவே மீறப்பட்டுவிட்டதாக செவ்வாயன்று இராணுவத்தினர் இரண்டு வயதான மாதரை அடித்துத் தள்ளும் வீடியோ ஒன்று வெளியாகிப் பறைசாற்றுகிறது.
மியான்மார் இராணுவம் பலவந்தத்தை நிறுத்துவது, ஆசியான் நாடுகளின் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை மியான்மாரின் நிலையைக் கண்காணிக்க அனுப்புவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய மனிதாபிமான உதவிகளை தேவையான பகுதிகளுக்குக் கிடைக்க உதவுவது ஆகிய உறுதிகளை மியான்மார் இராணுவத் தலைமை ஆசியான் அமைப்பில் கொடுத்திருந்தது.
ஏற்கனவே உறுதிகளை மீறிய மியான்மார் இராணுவம் தாமே நாட்டில் தமது வழியில் ஸ்திரத்தையும், ஒழுங்கையும் ஏற்படுத்துவதாகவும் வழமைபோல எல்லாவற்றையும் இயங்கவைப்பதாகவும் கூறுகிறது. இதன் மூலம் ஆசியான் நாடுகளின் ஒன்றியத்தின் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கிறது. மியான்மார் இராணுவம் அந்த அமைப்புக்குக் கட்டுப்படப்போவதில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.
மியான்மாரில் ஜனநாயக ரீதியான போராட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் நாட்டின் நிழல் பாராளுமன்ற அமைப்பினர் சர்வதேசத்தின் உதவியை வேண்டுகிறார்கள். நாட்டின் இராணுவத் தலைமை மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் நாங்கள் ஆயுதங்களை வாங்கவாவது அனுமதியுங்கள் என்றும் சில குழுக்கள் கேட்கின்றன.
மியான்மாரின் இராணுவத்தின் இத்தனை அராஜகங்களைப் பொறுத்துக்கொண்டு தொடர்ந்தும் தினசரி எதிர்ப்பு ஊர்வலங்கள் நடந்து வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்