தொடர்ந்தும் ஆட்சியிலிருக்க மஹ்மூத் அப்பாஸுக்குச் சாட்டுக் கிடைத்துவிட்டதா?
பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் பாலஸ்தீனப் பிராந்தியங்களுக்குத் தேர்தலை அறிவித்திருந்த ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அவைகளை மீண்டும் தள்ளிவைக்கும் அறிவிப்பை இன்று செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே, ஜூன் மாதங்களில் தங்கள் வாக்குகள் மூலம் பாலஸ்தீனப் பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களையும், ஜனாதிபதியையும் தெரிவுசெய்ய எதிர்பார்த்திருந்த பாலஸ்தீனர்கள் இதனால் ஏமாற்றமடைந்திருக்கின்றனர்.
தேர்தல் ஒத்திவைப்புக்குக் காரணமாக பாலஸ்தீன அதிகாரம் சொல்லும் காரணம் இஸ்ராயேலுக்குள் இருக்கும் கிழக்கு ஜெருசலேமுக்குள் வாழும் பாலஸ்தீனர்களுக்கான வாக்கெடுப்புகளை நடத்த இஸ்ராயேல் அரசு ஒழுங்கு செய்யாது என்பதாகும். அது வெறுமனே ஒரு சாட்டுத்தான் என்று அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
இஸ்ராயேலால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கிழக்கு ஜெருசலேமுக்குள் வாழும் பாலஸ்தீனர்கள் இஸ்ராயேலின் அடையாள அட்டைகளைக் கொண்ட பாலஸ்தீனக் குடிமக்கள். அதனால் அவர்களுக்கும் பாலஸ்தீனத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. அவர்கள் வாக்களிப்பதற்கான தேர்தல் சாவடிகளை உண்டாக்கி நிர்வகிக்கும்படி இஸ்ராயேலிடம் அப்பாஸ் வைத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையே தேர்தல் தள்ளிவைப்புக்குக் காரணமாகக் காட்டுகிறார் அப்பாஸ்.
சுமார் ஒரு மாதத்துக்கு முன்னரே பலரும் ஊகிக்க ஆரம்பித்தது போல மஹ்மூத் அப்பாஸ் ஆட்சியை இழந்துவிடுவோம் என்ற உண்மையைப் புரிந்துகொண்டதாலேயே தனது மக்களின் ஜனநாயக உரிமையை மீண்டும் பறித்தெடுக்கிறார். அப்பாஸின் ஆட்சியின் ஊழல்கள் மட்டுமின்றி நிர்வாகமே அனேகமாக ஸ்தம்பித்த நிலை அவரது ஆதரவாளர்களாக இருந்தவர்களையே அவர்மீது நம்பிக்கையை இழக்க வைத்துவிட்டது.
அப்பாஸின் கட்சியான அல் – பத்தா பெரும் பலவீனமடைந்திருக்கிறது. அவருக்கெதிராக இரண்டு பிரிவுகள் எழுந்து தனித்தனியாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன. அதைத் தவிர ஹமாஸ் இயக்கத்தினரும் போட்டியிடுகிறார்கள். விளைவு, அனேகமாக அப்பாஸ் தனது அதிகாரத்தை இழந்துவிடுவாரென்பது நிச்சயம் என்று அவருக்கே புரிந்துவிட்டது.
பாலஸ்தீனத் தேர்தல் மீண்டுமொருமுறை ஜெருசலேமின் ஸ்தானம் பலஸ்தீனா – இஸ்ராயேல் நாடுகளில் எதுவாக இருக்கும் என்ற கேள்வியை முக்கியமானதாக்கியிருக்கிறது. ஒரு சில நாட்களுக்கு முன்பிருந்து இஸ்ராயேலின் யூதர்கள் சிலர் பாலஸ்தீனர்கள் வசிக்கும் கிழக்கு ஜெருசலேமுக்கு ஊர்வலமாகச் சென்று “அராபர்களே செத்தொழியுங்கள்!” என்று கோஷமெழுப்பி வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்