“இன்னொரு சுயஸ் கால்வாய்த் திட்டம்,” என்ற ஏப்ரல் முட்டாள் செய்தியும் அதை நம்பிய ஊடகங்களும்.
பிரபல பத்திரிகையான கார்டியன் ஏப்ரல் முதலாம் திகதியன்று “ஏப்ரல் ஏமாற்றுச்” செய்தியாக “Suez 2′? Ever Given grounding prompts plan for canal along Egypt-Israel border” என்ற தலைப்பில் ஏற்கனவே ஐ.நா-வினால் ஆராயப்பட்ட ஒரு போக்குவரத்துக் கால்வாய்த் திட்டத்தை ஐக்கிய ராச்சியமும், இஸ்ராயேலும் சேர்ந்து ஏற்படுத்தவிருக்கின்றன என்று எழுதியிருந்தது.
சமீப வாரத்தில் சுயஸ் கால்வாய் பற்றிய செய்திகள் உலக ஊடங்களையெல்லாம் ஆக்கிரமித்திருந்தன. அவ்வழியில் கரையில் முட்டியதால் போக்குவரத்தை நிறுத்திய கப்பலும் அதனால் உலக நிறுவனங்களுக்கெல்லாம் ஏற்பட்ட பில்லியன் கணக்கான நட்டங்களும் பல கோணங்களிலும் எழுதப்பட்டு வந்தன. எனவே, கார்டியன் அதை வைத்து இட்டுக்கட்டி ஒரு பொய்ச் செய்தியைச் சரியான நாளில் வெளியிட்டிருந்தது ரசிக்கத்தக்கதே தவிர நம்பத் தகுந்ததாக இல்லை.
இந்த வழியானது அக்காபா வளைகுடாவிலிருக்கும் இஸ்ராயேல் துறைமுகமான எய்லாத்தையும் ஆஷ்டொட் துறைமுகத்தையும் இணைக்கும் கால்வாயாக இருக்கும். ஏடென் வளைகுடா, செங்கடல் மூலமாக வரும் இப்பாதை அக்காபா வளைகூடா ஊடாகத் திரும்பிப் புதிய கால்வாயூடாகச் சென்று மத்தியதரைக் கடலில் ஆஷ்டொட் அருகே முடிவடையுமென்பது பொய்ச் செய்தியின் வழியாகும்.
ஆனாலும் தமது குறுகிய நோக்கால் ஏப்ரல் முட்டாள் செய்தியைத் தாம் நம்பியதுமன்றி தம்மைச் சார்ந்திருக்கும் செய்தி ஸ்தாபனங்களுக்கும் பரப்பியிருந்தன துருக்கிய ஊடகங்கள். மட்டுமல்ல ஒரு படி மேலே போய் அப்பொய்ச் செய்திக்குச் சோடனை செய்தும் எழுதித் தமது வாசகர்களிடையே பரப்பின.
துருக்கிய பிபிசி “இரண்டாவது சுயஸ் கால்வாய்த் திட்டம். ஐ.நா-புதியதொரு போக்குவரத்து வழி உண்டாக்குவதைப் பற்றி ஆலோசிக்கிறது,” என்று தலையங்கமிட்டு அந்தச் செய்தியை உண்மையாக எழுதியிருந்தது. பின்னர் அது அகற்றப்பட்டது.
நைலுக்கும் செங்கடலுக்குமிடையே இருந்த ஒரு பழங்கால வழி மீண்டும் ஏற்படுத்தப்படவிருக்கிறது என்று குறிப்பிட்டு துருக்கிய செய்தி நிறுவனங்களான Hurriyet, Milliyet, Birgun ஆகியவை ஏப்ரல் முட்டாள் செய்தியை நிஜமாக்கியிருந்தன. அந்த வழிக்கு “பாரோக்களின் பாதை” என்றும் பெயர் சூட்டிவிட்டிருந்தன.
Yeni Safak என்ற துருக்கிய ஊடகத்தின் முதல் பக்கம் “போர் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே ஆரம்பித்துவிட்டது” என்ற தலைப்புடன் ஐக்கிய ராச்சியமும் சேர்ந்து எகிப்த்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் வழியின் கட்டுப்பாட்டைத் தம்மகப்படுத்த முனைகிறார்கள், என்று தொடர்ந்தது. அக்கட்டுரை ‘இது நிஜமாகும்போது பாலஸ்தீனர்களின் நிலத்தைப் பறித்த இஸ்ராயேலானது சீனா, மத்திய கிழக்கு, ஐரோப்பா ஆகியவைகளின் இணைப்புக்கான ஆதாரத்தைக் கைப்பற்றி உலகின் 12 விகிதமான வர்த்தகங்களுக்குமான வழியை ஆளும் என்று எழுதியது.
2018 இல் துருக்கி பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரை அந்த நாட்டில்தான் மக்கள் அளவுக்கதிகமான பொய்ச் செய்திகளைச் சந்திக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் மிகைப்படுத்தப்பட்ட பொய்களுடன் தலையங்களையும் செய்திகளையும் பரப்புவதும், மிக மோசமான மொழிபெயர்ப்புக்களுடன் உலக ஊடகங்களின் செய்திகளை வெளியிடுவதும் துருக்கியில் சாதாரணமாக நடப்பதாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்