வழக்கத்துக்கு மாறாகப் புனித வாரத்தில் வெறிச்சோறிக்கிடந்த பேதுரு சதுக்கம்.
பாப்பரசர் பிரான்சீஸ் “சிலுவைப்பாதை” நிகழ்ச்சியை வெள்ளியன்று மிகவும் சிறிய அளவில் அங்கே நிகழ்த்தினார். கொரோனாக் கட்டுப்பாடுகள் நிலவும் ரோமில் சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிறிய எண்ணிக்கையினருக்கே அனுமதி கிடைத்தது. தொடர்ந்து இரண்டாவது வருடமாக புனித வார நிகழ்ச்சியில் வத்திக்கான் வெறிச்சோறிக் கிடக்கிறது.
கொரோனாத் தொற்றுக்களுக்கு முந்தைய வருடங்களில் சம்பிரதாயரீதியாக கொலஸியம் முதல் அரண்மனை வரை சிலுவைப்பாதையின் 14 இடங்களும் எரியும் மெழுகுதிரிகள் வைத்து அலங்கரிக்கப்பட்டிருக்கும். பேதுரு சதுக்கம் உட்பட்ட வத்திக்கானின் பகுதிகளில் மக்கள் கூட்டம் எறும்புகளாக நெருங்கியிருக்கும்.
இந்தப் பெரிய வெள்ளியில் 200 பேருக்கு மட்டுமே சிலுவைப் பாதை நிகழ்ச்சியில் பங்குபற்ற அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. வத்திக்கான் பேதுரு சதுக்கம் ஒரு பெரிய சிலுவை அடையாளத்திலான எரியும் மெழுகுதிரிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பாப்பரசரின் இரண்டு பக்கமுமாக அந்த 200 பேரும் பரவியிருந்தனர்.
சிலுவைப் பாதை நிகழ்ச்சிக்கான வரிகளை ஒரு குழுவினர் எழுத இன்னொரு குழுவினர் அதை வாசித்துப் பங்கெடுப்பது என்பது வழமையானது. இம்முறை உம்பிரே பிராந்தியச் சாரணர்கள் அந்த நிகழ்ச்சிக்கான வரிகளை எழுதியிருந்தார்கள். சிலுவைப் பாதை நிகழ்ச்சியில் பங்கெடுத்து அவற்றை வாசித்த சிறு பிள்ளைகள் ரோமின் ஒரு பாடசாலையைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்