நீண்ட காலப் பொது முடக்கங்களால் தொலைத்தொடர்புகள் மூலம் கற்பிக்கப்பட்ட ஜேர்மனிய மாணவர்களுக்கு மீண்டும் அதே வகுப்புகளா?

பிள்ளைகளுடைய கல்வியூட்டல் தடைப்படுகிறதே என்ற கிலேசம் சமீபத்தில் ஜேர்மனி தனது கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஆனாலும், தொடர்ந்து மோசமாகி வரும் கொரோனாத் தொற்றுக்களின் நிலைமையால் நாடு முழுவதுமான பொதுமுடக்கம் விரைவில் கடுமையாகலாம் என்று அஞ்சப்படுகிறது. 

கொரோனாக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் ஜேர்மனி முழுவதிலும் தொடர்ந்தும் எல்லாப் பாடசாலைகளிலும் சாதாரணமாக வகுப்புக்கள் ஆரம்பிக்க முடியவில்லை. ஆங்காங்கே கொரோனாத் தொற்றுக்கள் கடுமையாக இருப்பதால் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வயதினர் முழுவதுமாகவோ அல்லது பகுதியினரோ வீட்டிலிருந்து டிஜிடல் தொடர்புகளால் கற்கவேண்டிய நிலையே நிஜமானதாக இருக்கிறது. அதனால், கல்வியூட்டலில் சமத்துவமில்லை, எல்லா மாணவர்களுக்கும் ஒரேவிதமான, தேவையான கல்வியறிவு பெறும் சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை என்ற விமர்சனம் நாடு முழுவதும் எழுந்து வருகிறது. 

ஜேர்மனியின் பெரும்பாலான பாடசாலைகளில் தொலைத்தொடர்புகள் மிகவும் மோசமாகவே இருந்து வருகின்றன. கொரோனாத் தொற்றுக்காலத்தின் முன்னர் பல ஜேர்மனியப் பாடசாலைகளில் இணைப்பில்லாத் தொடர்புகளே இருக்கவில்லை, டிஜிடல் வகுப்புக்கள் பற்றிய அறிவு ஆசிரியர்களுக்கோ மாணவர்களுக்கோ இல்லை என்று குறிப்பிடப்படுகிறது. 

பாடசாலைகளில் இப்படியான தொடர்புகளை உண்டாக்கவும், ஆசிரியர்களை டிஜிடல் கற்பித்தலில் பழக்குவதற்காகவும், 2019 இல் ஜேர்மன் அரசு 5 பில்லியன் எவ்ரோக்களை ஒதுக்கியது. ஆனால், அப்பணத்தின் பெரும்பாலான பங்கு பலரால் பாவிக்கப்படவில்லை. எனவே நாட்டின் ஒரு பகுதி மாணவர்களும் ஆசிரியர்களும் டிஜிடல் கல்வியைப் பற்றி அறிந்திருக்க பல பாகங்களில் அவற்றில் எவ்வித பரிச்சயமுமில்லாத நிலையில் அவர்கள் மீது இத்தொலைத்தொடர்புக் கல்வி தூக்கி வீசப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் உணர்கிறார்கள்.

“டிஜிடல் கல்விமுறை என்பது ஏற்கனவே ஒரு நிறைவேற்றப்படாத திட்டமாகவே இருந்தது. ஆசிரியர்கள் பலருக்கு மின்னஞ்சல் விலாசமே கிடையாது என்ற நிலையே பாடசாலைகளில் நிலவுகிறது. இந்தக் கையாலாகாத நிலையைக் கொரோனாத் தொற்றுக்காலம் மேலும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது,” என்கிறார்கள் ஆசிரியர்கள். 

கொரோனாக்காலக் கட்டுப்பாடுகளுக்காக டிஜிடல் வகுப்புக்களை நடாத்தவேண்டிய கட்டாயத்துக்குள்ளான ஆசிரியர்கள் பலர் தொழில் நுட்பப் பிரச்சினைகளைத் தாமே தீர்த்துக்கொள்ளவேண்டியதாயிற்று என்கிறார்கள். அதற்கான பயிற்சியும் வசதியுமற்ற நிலையில் அவர்கள் அதைத் தமது சொந்தப் பணத்தில், நேரத்தில் செய்துகொள்ள வேண்டியதாக இருந்தது. 

பெற்றோர்கள் பலரும் கூடத் தமது பிள்ளைகளின் கல்வி நிலையில் அதிருப்தியையே அடைந்திருக்கிறார்கள். அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியதைக் குறிப்பிட்ட வகுப்பில் கற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களுடைய எதிர்காலம் பலவீனமாகிவிடுமென்று அவர்கள் சஞ்சலமடைந்திருப்பதால் பல பகுதிகளிலும் மாணவர்கள் ஏற்கனவே படித்த வகுப்பைத் திரும்பிப் படிக்கவைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *