ஓய்ந்துவிட்டதா அல்லது முதலாவது திரை விழுந்திருக்கிறதா ஜோர்டானிய அரசகுடும்பப் பதவிப் பிரச்சனைகளில்?
மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகவும் ஸ்திரமானது என்ற பெயருடன் இருந்துவந்த ஜோர்டானிய அரசகுடும்பத்தின் அங்கத்தவரொருவர் அரசன் அப்துல்லாவுக்கு எதிராக இயங்க முற்படுகிறாரென்ற செய்தி ஞாயிறன்று உலக அரசியலரங்கத்தை அதிரவைத்தது. திங்களன்று இரவு சுட்டிக்காட்டப்பட்ட அரசகுமாரன் தான் அரசனின் “தலைமைக்குள் அடங்குவதாக” அறிக்கை விட்டதுடன் ஓயவில்லையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
சனியன்று ஜோர்டானிய அரசகுமாரன் ஹம்சாவை அவரது அரண்மனையில் சந்தித்த இராணுவத் தளபதிகளின் உயர்மட்ட அதிகாரி யூசுப் ஹுனெய்தி அவருடன் உரையாடியவைகள் ஒரு நாடாவில் பதியப்பட்டு வெளியாகியிருக்கின்றன. அதிலிருக்கும் விபரங்கள் தணிந்துவிட்டதாகக் குறிப்பிடப்படும் பிரச்சினைகளுக்கு எரிநெய்யூட்டுமா என்ற சந்தேகம் உண்டாகியிருக்கிறது.
‘அளவுக்கதிகமாக விமர்சனங்களைக் கொண்டு திரியும் சிலருடன் இளவரசன் அடிக்கடி சந்திப்பதைத் தடுக்க அவரை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக’ யூசுப் ஹுனெய்தி தெரிவிக்கிறார். அது ஹம்சாவைக் கொதித்தெழச் செய்கிறது.
“அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனிடம் அவனது வீட்டுக்கே வந்து, நான் இந்த நாட்டில் நான் யாரைச் சந்திக்கலாம், கூடாது என்று சொல்ல நீ யார்? பாதுகாப்பு அதிகாரிகளான நீங்கள் என் வீட்டிலேயே வந்து என்னை மிரட்டுகிறீர்களா? நான் குடும்பத்தை மட்டுமே சந்திக்கலாம், மற்றவர்களைச் சந்திக்கலாகாது, டுவீட்டலாகது என்று சொல்லும் அதிகாரத்தை உனக்கு யார் கொடுத்தது?” என்று கோபத்தை உமிழ்கிறார் ஹம்சா.
“இந்த நாட்டின் நிலைமை மோசமாவதற்கு நானா காரணம்? தவறுக்ளெல்லாம் என்னுடையவையா? என்னையா மன்னிப்புக் கேட்கச் சொல்கிறீர்கள்?” என்று ஹூனெய்தியிடம் சீறுகிறார் அரசகுமாரன் ஹம்சா. ஹுனெய்தியோ அமைதியான குரலில் நிலைமையைச் சமாளிக்க முயல்கிறார்.
எதையும் கேட்காத ஹம்சா “எடு உனது காரை, இங்கிருந்து தொலைந்து போ!” என்று சொல்லித் துரத்திவிடுகிறார். வெளியாகியிருக்கும் இந்த உரையாடலில் வெளிநாட்டுத் தொடர்புகளோ, ஆட்சிக் கவிழ்ப்பு பற்றிய விபரங்களோ, அரசன் அப்துல்லாவின் செய்தி என்னவென்பதையோ எங்குமே காணவில்லையென்பது புதிய சந்தேகங்களை உருவாக்கியிருக்கிறது.
உலகமெங்கும் பெரிதும் மதிக்கப்பட்ட மன்னர் ஹூசேனின் வெவ்வேறு மனைவியரின் மகன்களான அப்துல்லாவும், ஹம்சாவும் ஜோர்டானில் உயர்ந்த மதிப்பைப் பெற்றிருக்கிறார்கள். இருவரையுமே அவர்களின் தந்தை நேசித்ததாலேயே ஹம்சாவைப் பட்டத்து இளவரசனாக்கினாரென்பதையும் மக்கள் அறிவார்கள். இவர்களிருவரும் ஒற்றுமையாக இருந்ததாகவே மக்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், ஹம்சா எப்போதுமே ஆட்சியை விமர்சித்தாலும் தனது சகோதரன் அப்துல்லாவை என்றுமே சுட்டிக்காட்டிச் சாடியதில்லையென்றும் மக்கள் அறிவார்கள்.
நடந்த அதிகாரக் கூத்துகள், ஆட்சிக்கவிழ்ப்புத் திட்டச் சந்தேகங்கள் எல்லாவற்றாலும் ஹம்சாவுக்கு ஆதரவாகப் பலரும் சமூகவலைத்தளங்களில் எழுதுகிறார்கள். பிரச்சினைகளை இரகசியமாகக் குடும்பத்துக்குள் கையாளாமல் வெடிகுண்டுபோல வெடிக்கவைத்ததுதான் வரவிருக்கும் காலத்தில் வாரிசுகளுக்கிடையே பேதங்களை உருவாக்குமோ என்று பல அரசியல் அவதானிப்பாளர்களும் கேள்வி எழுப்புகிறார்கள்.
சாள்ஸ் ஜெ.போமன்