அமெரிக்க எல்லையில் தஞ்சம் கேட்டுக் குவியும் வயதுக்கு வராதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவுக்குள் தஞ்சம் கோரி வருபவர்களைக் கட்டுப்படுத்திய டிரம்ப் போலன்றித் தான் அதிகமானவர்களை ஏற்றுக்கொள்ளும்படி அமெரிக்காவின் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவருவேனென்று உறுதி கூறியிருந்தார் ஜோ பைடன். அவரது தேர்தல் வாக்குறுதியை நம்பி மெக்ஸிகோவின் எல்லையூடாக அமெரிக்காவை வந்தடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மார்ச் மாதத்தில் மட்டும் அமெரிக்க எல்லையில் வந்து தஞ்சம் கேட்டவர்களின் எண்ணிக்கை 173 000 ஆகும். அது பெப்ரவரி மாதம் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கையைவிட 70 % அதிகம். அவர்களில் 19,000 பேர் வயதுவந்தவர்களின்றித் தனியே வந்த பிள்ளைகளாகும்.
டெக்ஸாஸில் வந்திறங்கும் அகதிகளைத் தங்கவைக்கும் முகாம்கள் பலவற்றையும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மூடிவிட்டிருந்தார். அவைகளில் பல வசதிகளில் மோசமாக இருந்ததாக மனித உரிமை அமைப்புக்களின் விமர்சனத்துக்கும் உருவாகியிருந்தன. அதே முகாம்களை, வேறு வழியின்றி தற்போதைய ஜோ பைடன் அரசு திறந்திருக்கிறது. திறக்கப்படும் அகதிகள் முகாம்கள் நிறைந்துவிடுவதால் அப்பகுதிகளில் முன்பு எரிநெய்த் தொழிலாளர்கள் வாழ்ந்த வதிவிடங்களும் முகாம்களாகத் திறந்து வைக்கப்படுகின்றன.
தனியாக அங்கே வந்து சேரும் பிள்ளைகளின் நிலைமை பற்றிப் பல ஊடகங்கள் எழுதிவருகின்றன. சிலர் பிள்ளைகளைக் கொண்டுவந்து எல்லை மதில்களின் மேலாக எறிந்துவிடும் சம்பவங்களும், குழந்தைக் குற்றவாளிகள் கூட்டமாக வந்து உள்ளே நுழையும் சம்பவங்களும் விபரிக்கப்படுகின்றன.
தஞ்சம் புக வருகிறவர்களிடன் அமெரிக்கா மென்மையாக நடந்துகொள்ளும் என்று உறுதிகூறிய ஜோ பைடன் திடீரென்று ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமையைச் சமாளிக்க என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகிறாரென்று எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்