உக்ரேனில் நிலைமை தனது ஸ்திர நிலைக்கு ஆபத்தென்று எச்சரித்துப் போருக்கு அறைகூவும் ரஷ்யா.
உக்ரேன் நாட்டின் அரசியல், சமூக நிலபரம் மிகவும் மோசமாகியிருப்பதாகக் குறிப்பிடுகிறது ரஷ்யா. தனது எல்லையையடுத்திருக்கும் நாட்டில் ஏற்பட்டிருக்கு அந்த நிலபரம் தனது நாட்டினுள்ளும் பரவ அனுமதிக்க முடியாது என்று கூறிக் கிழக்கு உக்ரேனிய எல்லையையடுத்துப் பெருமளவில் தனது இராணுவத்தைக் குவித்திருக்கிறது ரஷ்யா.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை ஏற்கனவே ரஷ்யாவிடம் தனது பிராந்தியத்தை இழந்திருக்கும் உக்ரேனால் சஞ்சலத்துடன் எதிர்கொள்ளப்படுகிறது. ரஷ்யாவைப் பொறுத்தவரை ‘உக்ரேனில் மோசமான ஒரு உள்நாட்டுப் போர் ஏற்பட்டிருப்பதாகவும், அதில் உக்ரேனில் வாழும் ரஷ்யர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்கலாகாது’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
ரஷ்யாவுக்கு ஆதரவான உக்ரேனில் ஒரு பகுதி ஏற்கனவே ரஷ்யாவின் முழு அதரவுடன் சுயாட்சியை அனுபவித்து வருகிறது. சமீபத்தில் அங்கே ஒரு சிறுவன் காற்றாடி விமானத்தால் போடப்பட்ட குண்டொன்றால் தாக்கப்பட்டு இறந்ததையே ரஷ்யா ஊதிப் பெரிதாக்கிப் போர்ப்பிரகடனம் செய்துவருவதாக உக்ரேன் அரசு குறிப்பிடுகிறது.
நீண்ட காலமாகவே உக்ரேனை மிரட்டிவரும் ரஷ்யாவை விமர்சித்துச் சமீபத்தில் ஜேர்மனியத் தலைவர் ஆஞ்சலா மெர்க்கல் குறிப்பிட்டிருந்தார். உக்ரேனை விசனப்படுத்தும் விதமாக எல்லைகளிலிருக்கும் ரஷ்ய இராணுவத்தை அகற்றும்படி அவர் கேட்டிருந்தார். அதற்கு எதிராகத் தன் பலத்தைக் காட்டவே ரஷ்யா மேலுமதிகமான இராணுவப் படையை அங்கே குவித்து வருகிறது என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்