தனது பதவிக்காலத்தை நீட்டிக்கொண்ட ஜனாதிபதியின் கட்டுப்பாடின்றி ஹைத்தி வன்முறை, போராட்டங்களால் தள்ளாடுகிறது.
கடந்த இரண்டு மாதங்களாகவே ஹைத்தியின் அரசியல் நிலை படிப்படியாகக் கட்டுப்பாட்டை இழந்து மோசமாகி வருகிறது. நாடெங்கும் வன்முறையிலானா கலவரங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. நாட்டின் அரசாங்கம் இவ்வாரத்தில் பதவியை விட்டு விலகிவிட்டது. அடுத்தது என்னாகும் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது வறிய நாடான ஹைத்தியில்.
கடந்த பல வருடங்களாகவே அரசியல், சமூக ஸ்திரமின்றி அலைக்களிக்கப்பட்ட நாடு ஹைத்தி. அடிக்கடி இயற்கை ஏற்படுத்தும் சேதங்களாலும் ஹைத்தி பாதிக்கப்படுவது வழக்கம். ஹைத்தியில் செயற்பட இயலாமல் ஐ.நா-வின் அமைதிப்படை 2017 இலிருந்தே வாபஸ் வாங்கிவிட்டது.
பல விதங்களிலும் குற்றங்களில் ஈடுபடும் குழுக்களே ஹைத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கின்றன. அவர்களுடைய மிக வாடிக்கையான குற்றம் கடத்தலும், கப்பம் வாங்குதலும் கொலைகளில் ஈடுபடுதலுமாகும். சமீபத்தில் ஐந்து பாதிரியார்களும், இரண்டு கன்யாஸ்திரிகளும் கடத்தப்பட்டிருப்பது சர்வதேசக் கவனத்தை ஈர்த்திருக்கிறது. கடந்த வருடத்தில் கடத்தப்பட்டவர்களில் பதியப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆகும். அதற்கு முன் வருடத்தில் அது 78 ஆக இருந்தது. இவ்வருடத்தில் இதுவரை 59 பெண்களும் 37 பிள்ளைகளும் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.
நாட்டின் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஜனாதிபதியோ கடுமையான நடவடிக்கைகள் மூலம் குற்றங்களில் ஈடுபடும் குழுக்களைத் தண்டிக்கப்போவதாக உறுதிகூறிவருகிறார்.
பதினொரு மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஹைத்தியின் 60 விகிதமானவர்களின் நாளாந்த வருமானம் 2 டொலர்களுக்குக் குறைவானது. கடத்தலில் ஈடுபடுபவர்கள் 300.000 டொலர்களிலிருந்து ஒரு மில்லியன் வரை கப்பமாகக் கேட்பதாகத் தெரிகிறது. நாளாந்தம் வானொலிகள், சமூகவலைத்தளங்களின் மூலமாக “எங்கள் உறவினர் கடத்தப்பட்டிருக்கிறார், கப்பம் கட்டப் பணம் தந்து உதவுங்கள்,” போன்ற வேண்டுகோள்கள் வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
நாட்டின் அரசியல்வாதிகள் புதிய அரசியலமைப்புச் சட்டங்களை உருவாக்கி வருவதாகக் குறிப்பிடுகிறார்கள். அவைகளின் விபரங்களைப் பகிரங்கப்படுத்தி நாட்டின் வெவ்வேறு சாராரையும் திருப்திப்படுத்தும் மாற்றங்களைச் செய்யுமாறு ஐ. நா வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்