பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் ஐரோப்பாவில் அதிகரித்து வருகின்றன.
கொரோனாத்தொற்றுக்காலம் பத்திரிகையாளர்களின் நிலமையை மேலும் ஆபத்துக்குள்ளாக்கியிருக்கிறது. ஒப்பீட்டில், பொதுவாகப் பத்திரிகையாளர்களுக்கான சூழல் பாதுகாப்பாக இருந்து வந்த ஐரோப்பிய நாடுகளில் கூட அத்தொழிலில் ஈடுபடுபவர்கள் நிலைமை ஆபத்து நிறைந்ததாக மாறி வருகிறது என்று வருடாவருடம் வெளியிடப்படும் சர்வதேச ரீதியான பத்திரிகையாளர் நிலமை பற்றிய அறிக்கை குறிப்பிடுகிறது.
பத்திரிகையாளர்களாகத் தொழில் செய்வது உலகிலேயே பாதுகாப்பானது என்ற நிலையிலிருக்கும் நாடுகளாகத் தொடர்ந்தும் நோர்வே, பின்லாந்து, டென்மார்க், சுவீடன், ஆகியவையைக் காணலாம். ஜேர்மனியில் பத்திரிகையாளர் நிலைமை பல ஆபத்துக்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. முக்கியமாக தீவிரவாகக் கோட்பாட்டு அமைப்புக்களாலும், திரிபுபடுத்திக் கதை பரப்புபவர்களாலும் ஜேர்மனியப் பத்திரிகையாளர்கள் மிரட்டல், தாக்குதல்கள் போன்றவைகளைச் சந்தித்து வருகிறார்கள்.
ஐரோப்பாவின் நிலைமைக்குக் காரணம் பத்திரிகைச் சுதந்திரம் குறைந்திருப்பது அல்ல எதிரெதிர்த் தீவிரவாதக் கோட்பாடுகள் கொண்ட அமைப்புக்கள் அதிகமாகிவிட்டன. அத்துடன் நம்பிக்கைகளைத் திரிபுபடுத்திப் பெரிதாக்கி வளர்க்கும் கும்பல்களும் அதிகரித்திருக்கின்றன. இவைகள் தமது கருத்துக்களை விமர்சிக்கும், வெளிப்படுத்தும் பத்திரிகையாளர்களைக் குறிவைக்கிறார்கள்.
தீவிரவாதக் கருத்துக்களை, திரிபுபடுத்தப்பட்ட கதைகளை நம்பும் மக்கள் ஐரோப்பாவில் அதிகரித்து வருகிறார்கள். உலகம் முழுவதையும் போலவே ஐரோப்பாவிலும் தற்போது பத்திரிகையாளர்களை, ஊடகங்களை நம்புகிறவர்கள் குறைந்து வருகிறார்கள். சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படும் திருபுபடுத்தப்பட்ட கதைகளை நம்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2016 ம் ஆண்டில் பத்திரிகைச் சுதந்திரத்தில் 133 வது இடத்திலிருந்த இந்தியா கடந்த வருடத்தைப் போலவே இவ்வருடமும் 142 வது இடத்தைப் பிடித்திருக்கிறது. 127 வது இடத்தைச் சிறீலங்கா பிடித்திருக்கிறது.
உலக நாடுகளில் பிரேசிலின் நிலைமை அதிகமாக மோசமாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. அங்கே ஜனாதிபதியே பொய்களைப் பரப்புவதும், விஞ்ஞான, மருத்துவ ஆராய்ச்சிகளைப் பொய்யென்று திரிபுபடுத்திக் கதை பரப்புவதும் பத்திரிகையாளர்களின் நிலைமையைப் பெரிதும் ஆபத்துக்குள்ளாக்கியிருக்கிறது. பத்திரிகைச் சுதந்திரம் மோசமாகிப் பத்திரிகையாளர்கள் நிலைமை மிகவும் ஆபத்துக்குள்ளான உலக நாடுகளில் கடைசிக்கு முதலுள்ள இடத்தை ரஷ்யா, பெலாருஸ் ஆகிய நாடுகளுடன் பிடித்திருக்கிறது. முதலாவது மோசமான நாடாகப் பத்திரிகையாளர்களுக்கு இருப்பது சீனாவாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்