“ரஷ்யாவைச் சொறிந்து பார்ப்பதென்பது மேற்கு நாடுகளுக்கு ஒரு விளையாட்டுப் பந்தயம் போலாகிவிட்டது!” புத்தின்.
வழக்கம்போலத் தனது நாட்டு மக்களுக்கான வருடாந்தரச் செய்தியை இன்று ஜனாதிபதி விளாமிடிர் புத்தின் வெளியிட்டார். ஏற்கனவே எதிர்பார்த்தது போல மேற்குலக ஊடகங்களில் பலமாக அடிபட்டுக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்செய் நவால்னி சிறையில் உண்ணாவிரதமிருந்து உயிருக்கு ஆபத்தான நிலையிலிருப்பது பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. தன்னை விமர்சிக்கும் மேற்குலகத்துக்குச் சில எச்சரிக்கைகளை புத்தின் அடிக்கோடிட்டு வெளிப்படுத்தினார்.
“எவராலும் மீறப்படலாகாது என்று ரஷ்யா கருதும் சில சிகப்புக் கோடுகள் உண்டு, அவைகளின் எல்லைகளை எவரும் தாங்கக்கூடாது. அந்த எல்லைகள் எவை என்பதை நாங்கள் தான் தீர்மானிப்போம்,” என்று அவர் எச்சரித்தார். அதையடுத்து தனது நாட்டின் இராணுவம் எப்படியெல்லாம் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது என்று சுருக்கமாக விபரித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் நவால்னியை சிறையிலிட்டது, உக்ரேனின் எல்லையில் படைகளைக் குவித்து மிரட்டிவருதல், தொலைதூரத் தொழில்நுட்பம் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மீதான ஊடுருவல் போன்றவைகளால் மேற்குலகத்துடனான உறவுகளில் கடும் விரிசல் ரஷ்யாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவைகளை நேரடியாகக் குறிப்பிடாமலே ரஷ்யா மீது குற்றச்சாட்டுக்களை வீசுவது மேற்கு நாடுகளிடையே ஒரு பந்தயம் போலாகிவிட்டது என்றார் புத்தின்.
“நாங்கள் எவருடனும் உறவுகளை மோசமாக்கிக்கொள்ள விரும்புவதில்லை. யாராவது எங்கள் மீது அனாவசியமாகக் குறிவைத்தால் நாம் வேகமாக, அதைவிட மோசமாகப் பதிலடி கொடுப்போம்,” என்றார் ஜனாதிபதி புத்தின்.
மேற்கொண்டு பேசுகையில் அவர் நாட்டின் பொருளாதார, சமூக வளர்ச்சிகளுக்கான திட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டார். பாடசாலைகளுக்கும், ஒற்றைப் பெற்றோர்களுள்ள குடும்பங்களுக்கும் பிரத்தியேகமான உதவிகளைச் செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார். இன்னும் சில மாதங்களில் ரஷ்யாவில் பாராளுமன்றத் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன.
நாட்டில் தற்சமயம் எதிர்க்கட்சிகள் நடாத்தத் திட்டமிட்டுவரும் ஊர்வலங்கள், கூட்டங்களின் முக்கிய புள்ளிகள் இன்று கைது செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது. “நாட்டின் அமைதியைக் குலைக்க முற்படுகிறவர்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கப்படும்,” என்பது உள்நாட்டு விமர்சகர்களுக்கு புத்தின் விடுத்த எச்சரிக்கையாகத் தொனித்தது.
சாள்ஸ் ஜெ. போமன்