கோடை காலத்தினுள் நாட்டின் வயதுக்கு வந்தோரெல்லாம் தடுப்பு மருந்தைப் பெற்றுவிடுவார்கள் என்கிறது ஐஸ்லாந்து.
ஐரோப்பாவில் 100,000 பேருக்கு 25 பேருக்குக் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனாத்தொற்று ஏற்பட்டிருந்த ஒரேயொரு நாடாக இருந்த ஐஸ்லாந்து சில நாட்களுக்கு முன்னர் அந்த ஸ்தானத்தை இழந்தது. தொற்றுக்கு உள்ளாகிறவர்கள் 100,000 க்கு 29.2 என்று ஆகிவிட்டது. உடனடியாகக் கடும் கட்டுப்பாடுகளைத் தனது எல்லைகளில் அமுல்செய்து வெளிநாட்டிலிருந்து வருபவர்களைக் கட்டாயமாகத் தனிமைப்படுத்தும் ஏற்பாட்டைக் கொண்டுவந்தது.
நிலைமை கை மீறிப்போகுமென்ற நிலையில் ஐஸ்லாந்துக்கு ஒரு நல்ல செய்தியும் கிடைத்தது. தடுப்பு மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவியதைத் தீர்க்க நோர்வேயிலிருந்து அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகள் ஐஸ்லாந்துக்குக் கிடைத்தன. பாவனைக்கு நிறுத்தப்பட்டிருக்கும் தடுப்பு மருந்துகளை ஐஸ்லாந்துக்குக் கடனாகக் கொடுக்க நோர்வே முன்வந்திருக்கிறது.
நோர்வேயிலிருந்து வரவிருக்கும் 16,000 அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகள் ஐஸ்லாந்தின் தடுப்பூசி போடுதலை மூன்று வாரங்களால் குறைத்திருக்கிறது. 65 வயதுக்கு அதிகமானவர்களுக்கு மட்டுமே ஐஸ்லாந்தில் அந்தத் தடுப்பூசி பாவிக்கப்படுகிறது. 360,000 சனத்தொகையைக் கொண்ட ஐஸ்லாந்துக்கு அது மிகப்பெரும் வித்தியாசத்தை உண்டாக்கியிருப்பதாக நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் குறிப்பிடுகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்