கொலம்பிய – வெனிசுவேலா எல்லையில் படைகள் மோதல், ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்கிறார்கள்.
மார்ச் மாதத்திலிருந்து தென்னமெரிக்காவின் கொலம்பியாவும், வெனிசூவேலாவும் எல்லைகளில் மோதிக்கொள்கின்றன. தாம் மோதும் எதிரி எவரென்பதற்கு இரண்டு நாடுகளும் வெவ்வேறு பதிலைக் கூறிக்கொள்கின்றன. வெனிசூலா இராணுவத்தைதாக்குவது கொலம்பியாவின் FARC கெரில்லாக்கள் என்கிறது கொலம்பியா. கொலம்பியாவின் அரசின் ஆதரவு பெற்றுப் போதைப் பொருட்கள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களே தம்மைத் தாக்குவதாகக் குறிப்பிடுகிறது வெனிசுவேலா.
இரண்டு நாடுகளில் தமக்கும் அங்கே பிரச்சினைகளை உண்டாக்குகிறவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று வாதிட்டுக்கொண்டிருக்கும் அதே சமயம் எல்லைப் போர் சமீப நாட்களில் மோசமாகிக்கொண்டிருக்கிறது. கொலம்பியாவின் ஒன்பது இராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வெனிசுவேலா புதனன்று மட்டும் எட்டு இராணுவத்தினரை இழந்திருக்கிறது. மொத்தமாகப் பதினாறு வெனிசுவேலா இராணுவத்தினர் இறந்திருக்கிறார்கள்.
இரண்டு நாடுகளுக்கும் இடையேயிருக்கும் அரௌகா நதியையொட்டிய லா விக்டோரியா என்ற நகரைச் சுற்றியே வெனிசுவேலாவின் தாக்குதல் மையம் கொண்டிருக்கிறது. வெனிசுவேலாவின் மேற்கு அபுரே மாநிலத்தைச் சேர்ந்த பகுதியிலேய் நீண்ட காலமாகவே கொலம்பியாவின் அரசின் ஆதரவுடன் போதை மருந்துத் தயாரிப்பாளர்கள் காலூன்றியிருப்பதாகவும் அவர்களை ஒழித்துக்கட்டவே இத்தாக்குதல் நடப்பதாகவும் வெனிசூவேலா குறிப்பிடுகிறது.
தற்போது குறிப்பிட்ட பிராந்தியத்தில் மட்டும் நடந்துவரும் இந்த மோதல்கள் இரண்டு நாடுகளுக்குமிடையே பெரும் போராக வெடிக்க முன்னர் ஐ.நா தலையிட்டு அமைதியை நிலைநாட்ட முயலவேண்டுமென்று மனித உரிமைக் குழுக்கள் கோருகின்றன. ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான சாதாரண மக்கள் இம்மோதல்களுக்குப் பயந்து எல்லைகளுக்கு வெளியே புலம்பெயர்ந்து வருகிறார்கள்.
வெனிசுவேலாவின் தலைவரான மடூரோவின் அரசுக்கெதிராகப் போராடி ஜனநாயகத்தை அங்கே நிலைநாட்டும்படி கோரிவரும் எதிர்க்கட்சித் தலைவர் ஹுவான் குவெய்டோடுக்கு கொலம்பியா ஆதரவு நல்கி வருகிறது. சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னரே இரண்டு நாடுகளும் தம்மிடையே உறவுகளை முறித்துக்கொண்டுவிட்டிருப்பதால் நிலைமை படிப்படியாக மோசமாகி வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்