சவூதியால் ஒழுங்குசெய்யப்பட்ட யேமன் அமைச்சரவையைக் குண்டு போட்டு வரவேற்றது ஹூத்தி இயக்கத்தினரே.
சர்வதேச அங்கீகாரத்துடன் சவூதி அரேபியாவின் அரசியல் திட்டப்படி கடந்த டிசம்பரில் யேமனுக்கு ஒரு அரசாங்கம் இழைக்கப்பட்டது. அவ்வரசைச் சேர்ந்த அமைச்சர்கள் தமது பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள கடந்த டிசம்பர் மாதம் ஏடன் விமான நிலையத்தில் வந்திறங்கினர். அச்சமயத்தில் அந்த விமான நிலையம் குண்டுகளால் தாக்கப்பட்டதில் சுமார் 22 பேர் மரணமடைந்தனர்.
கடந்த அமெரிக்க ஜனாதிபதியால் “தீவிரவாதிகள்” பட்டியலில் வைக்கப்பட்ட ஹூத்திகளை அப்பட்டியலிலிருந்து விலக்கிய தற்போதைய அமெரிக்க அரசு யேமனில் அமைதியைக் கொண்டுவருவதற்கான தீர்வுகளை பிரஸ்தாபிக்க முற்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக சவூதி அரேபியா சமீபத்தில் ஒரு பக்கப் போர்நிறுத்தத்தை அறிவித்துவிட்டு அதையே ஹூத்திகளும் பின்பற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.
அமைதிப் பேச்சுவார்த்தைகளை இரண்டு தரப்பும் போர்நிறுத்தத்தில் ஈடுபட்டபின் ஆரம்பிக்க விரும்புவதாக சவூதி அரேபியா குறிப்பிட்டாலும் ஈரானின் ஆதரவுடன் யேமனின் பெரும்பாலான பகுதிகளைக் கைக்குள் வைத்திருக்கும் ஹூத்திகள் அதற்கு ஒப்பவில்லை.
அமெரிக்காவாலும் ஆதரிக்கப்படும் அப்போர்நிறுத்தத்தைத் தானும் ஆதரிப்பதாகச் சமீபத்தில் சீனாவும் அறிவித்திருக்கிறது. ஆனாலும், ஹூத்திகள் தொடர்ந்தும் முரண்டு பிடித்து வருகின்றனர்.
ஏடன் விமான நிலையத்தில் இறந்துபோனவர்களில் சில யேமன் அரச அதிகாரிகளும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த மூவரும் அடக்கம். அக்குண்டுகளை வைத்தவர்கள் யாரென்று ஆராய ஐ.நா தனது விற்பன்னர்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்திருந்தது. அவர்களுடைய விசாரணையின்படி ஹூத்தி இயக்கத்தினரிடமிருந்தே அக்குண்டுகள் வந்திருந்தன.
ஐ.நா-வின் அந்த அறிக்கையை அதன் ஆதாரங்களோடு வெளிப்படுத்துவதைக் கடைசி நிமிடத்தில் ரஷ்யா தடுத்து விட்டது. எதற்காக ரஷ்யா அந்த முடிவை எடுத்தது என்பதை அறிவிக்க மறுத்தது.
சமீப மாதத்தில் அதிகரித்திருக்கும் யேமன் போரினால் நாட்டு மக்களின் வேதனை மேலும் அதிகரித்திருக்கிறது. ஏற்கனவே உலகின் படு மோசமான போர் என்று குறிப்பிடப்படும் போரில் தற்போது யேமனின் 80 % விகித மக்கள் தமது சகல தேவைகளுக்கும் உதவி நிறுவனங்களையே தங்கியிருப்பதாகத் தெரியவருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்