பருத்தியும், சக்கரையும் பாரதத்திலிருந்து வாங்கிப் பொருளாதாரப் பாலமமைக்கப் போகும் பாகிஸ்தான்.
இந்தியாவுடனான வர்த்தகக் கட்டுப்பாடுகளில் தளர்வுகளைச் செய்திருக்கிறது பாகிஸ்தான். நாட்டில் ஏற்பட்டிருக்கும் தேவைகளை எதிர்நோக்கவேண்டி அவசரமாகக் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டு வர்த்தக அமைச்சர் அஹ்மத் ஆஸார் அதை அறிவித்தார்.
பாகிஸ்தான் ஏப்ரல் முதல் ஜூன் கடைசிப் பகுதி வரை இந்தியாவிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்யும். அத்துடன் நாட்டின் தனியார் நிறுவனங்கள் 500,000 தொன் சர்க்கரையை இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யவும் அனுமதி கொடுக்கப்படும். காரணம் இந்தியாவில் சர்க்கரை விலை மலிவாக இருப்பதாகும். அதை மலிவு விலையில் கொள்வனவு செய்வது மூலம் பாகிஸ்தானில் ஏழை மக்களுக்கு அது குறைந்த விலையில் கிடைக்கும் என்கிறார் அமைச்சர். 2019 வரை இந்தியாவின் முக்கிய பருத்தி இறக்குமதியாளராக இருந்த பாகிஸ்தான் பக்கத்து நாட்டுடனான தகராறுகளால் அதனுடனான வர்த்தகத்தை நிறுத்தியது.
சர்வதேச ரீதியில் இந்தியா பருத்தித் தயாரிப்பில் முதலிடத்தையும், சர்க்கரைத் தயாரிப்பில் இரண்டாவது இடத்தையும் வகிக்கிறது. எகிப்து போன்ற நாடுகளிலிருந்து வாங்கும் சர்க்கரையின் விலையால் பாகிஸ்தானில் சர்க்கரை விலை மிகவும் உயர்ந்திருக்கிறது.
ஏற்கனவே பாகிஸ்தான் இந்தியாவின் சர்க்கரையை அதிக விலை கொடுத்து டுபாய், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் இடைத்தரகர்கள் மூலம் வாங்குகிறது. நேரடியாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு மலிவான விலையில் பருத்தியையும், சர்க்கரையையும் விற்க இந்தியா முன்வந்திருக்கிறது.
மார்ச் மாத ஆரம்பத்தில் பாகிஸ்தான் பிரதமரும், இராணுவ உயர் தளபதியும் தாம் இந்தியாவுடனான நிரந்தரத் தீர்வு ஒன்றுக்கான பேச்சுவார்த்தைகளில் இறங்கத் தயார் என்று அறிவித்திருந்தனர்.
அதையடுத்து மார்ச் 23 பாகிஸ்தான் தனது முதலாவது அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட நாளைக் கொண்டாடியபோது இந்தியப் பிரதமர் மோடி, இம்ரான் கானையும் நாட்டு மக்களையும் வாழ்த்திச் செய்தி அனுப்பியிருந்தார். அதைத் தொடர்ந்தே இரண்டு நாடுகளும் மேற்கண்ட வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்