மழைக்காடுகளை அழித்தல் 2020 இல் அதிகரித்தன.
பழமையான மழைக்காடுகளை அழித்தலை எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்தில் ஒரு பெரும் தொய்வை 2020 இல் காணமுடிந்தது என்று செயற்கைக் கோள்கள் மூலம் காடுகளைக் கண்காணித்துவரும் அமைப்பு தெரிவித்தது. நெதர்லாந்து போன்ற அளவிலான பரப்பளவு கொண்ட மழைகாடுகள் அழிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
சராசரியாக வருடாவருடம் அழிக்கப்பட்டுவரும் மழைக்காடுகளை விட 12 % அதிகமான அளவு கடந்த வருடத்தில் அழிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடங்களில் சர்வதேச ரீதியில் எழுந்த கடுமையான விமர்சனங்களைத் துச்சமாக மதித்து மிக அதிக அளவில் மழைக்காடுகளை அழித்திருக்கிறது பிரேசில். இரண்டாவதாக அதிக காடுகளை அழித்த நாடான கொங்கோ குடியரசைவிட மூன்று மடங்கு அழிப்பை பிரேசில் நடத்தியிருக்கிறது.
மழைக்காடுகள் உலகத்தின் நுரையீரல் போன்றவை என்று ஒப்பிடப்படுவதுண்டு. உலகின் மனிதனின் செயற்பாடுகளால் உண்டாக்கப்படும் கரியமிலவாயுவை உறிஞ்சியெடுப்பவை மழைக்காடுகளாகும். காடுகளின் அழிவால் ஏற்கனவே சூழலில் அதிகமாகிவரும் கரியமிலவாயுவின் பங்கு மேலும் அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது.
வளிமண்டலத்தில் கரியமிலவாயுவின் பங்கு அதிகமானால் அது எமது காலநிலையை மேலும் வேகமாக வெம்மையாக்கும். அத்துடன் பழமையான மழைக்காடுகள் அழிக்கப்படும்போது காட்டிலிருக்கும் வெவ்வேறு விதமான தாவரவகைகளும் அழிக்கப்படும். குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் வாழும் சில பிரத்தியேக மரங்கள் மொத்தமாகவே அழிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் உலகின் தாவரவகைகளின் எண்ணிக்கை குறையும். அக்குறிப்பிட்ட தாவரத்தை அண்டி வாழும் பிரத்தியேக மிருகங்களும், மற்றைய தாவரங்களும் அழியும் வாய்ப்புமுண்டு.
கொவிட் 19 பரவலைத் தடுக்கப் போடப்பட்ட கட்டுப்பாடுகளும் காடுகள் அழிக்கப்படல் அதிகமாவதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாமென்று கருதப்படுகிறது. பல முடக்கல்களால் காடுகளைப் பாதுகாத்தலும் குறைந்திருந்தபோது களவாகக் காட்டை அழிப்பவர்கள் தமது கைவரிசையைக் காட்டியிருக்கக்கூடும்.
அதேசமயம் சில நம்பிக்கை ஒளிக்கீற்றுகளும் உண்டாகியிருப்பதைக் காண முடிகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளின் மழைக்காடுகள் அழிக்கப்படுதல் குறைவடைந்திருக்கிறது. முக்கிய காரணியாக அந்த நாடுகளில் தயாரிக்கப்படும் பாமாயிலை வாங்கச் சர்வதேச ரீதியில் பல நாடுகள் மறுத்துவருவது சுட்டிக் காட்டப்படுகிறது. பாமாயில் தயாரிப்பாளர்கள் பெருமளவில் மழைக்காடுகளை அழித்துவருவதைத் தடுக்கவே குறிப்பிட்ட நாடுகளின் பாமாயிலைப் புறக்கணிக்குமாறு காலநிலை பேணும் அமைப்புக்கள் குரலெழுப்பின.
சாள்ஸ் ஜெ. போமன்