குகைக்குள் தடம்புரண்ட தாய்வான் ரயில் விபத்தில் 50 பேருக்கும் அதிகமானோர் இறப்பு.
தாய்வானில் சுமார் 350 பேருடன் பயணித்த ரயிலொன்று குகைப் பாதை ஒன்றுக்குள் சென்றபோது தடம்புரண்டிருக்கிறது. தாய்துங் என்ற நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கடுகதி ரயிலொன்றே ஹுவாலியன் என்ற இடத்தில் வெள்ளியன்று காலை விபத்துக்குள்ளாகியிருக்கிறது. ரயிலில் பயணிகள் நிறைந்திருந்ததாகத் தெரிகிறது.
தாய்வான் நாட்டின் சரித்திரத்திலேயே மோசமான ஒரு விபத்தாகக் குறிப்பிடப்படும் இதில் சுமார் 54 பேர் இறந்திருக்கிறார்கள். மேலும் 60 பேர் மருத்துவசாலைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. ரயிலின் ஒரு பக்கத்திலிருந்த பெட்டிகளில் சென்ற பயணிகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டிருக்கிறார்கள். மேலும் சிலர் குகைக்குள்ளேயிருக்கும் ரயிலின் பாகங்களுக்குள் அகப்பட்டிருக்கிறார்கள். மீட்புப் படையினர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து முடிந்தளவு வேகத்தில் பயணிகளைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டுள்ளார்கள்.
ரயில் பாதையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த பாரவண்டியொன்று தவறான முறையில் நிறுத்தப்பட்டு ரயில் பாதையை மறித்துக்கொண்டிருந்ததால் ரயில் அதிலே மோதிக் குகையின் சுவர்மீது பாய்ந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று தாய்வான் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
சாள்ஸ் ஜெ.போமன்