சிறீலங்காவில் பாமாயில் பாவிப்பு, இறக்குமதி நிறுத்தலின் பின் அதன் தயாரிப்பும் நிறுத்தப்படும்.
சிறீலங்காவின் தேங்காயெண்ணெய்த் தயாரிக்க ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் பாமாயில் இறக்குமதி, விற்பனை ஆகியவற்றை உடனடியாக நிறுத்த நாட்டின் ஜனாதிபதி கோட்டபயா ராஜபக்சே உத்தரவிட்டிருக்கிறார். விரைவில் அவற்றின் தயாரிப்பும் படிப்படியாக நிறுத்தப்படவேண்டுமென்பதே திட்டம்.
பாமாயில் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் நிறுவனங்கள் தம்மிடமிருக்கும் மரங்களில் 10 % ஐ அகற்றி அவற்றில் ரப்பர் மரங்களையோ, சுற்றுப்புற சூழலுக்கு நல்விளைவு தரும் மரங்களையோ நடவேண்டுமென்று ஆறு மாதங்களுக்கு முன்னரே அறிவிப்புக்கள் அனுப்பப்பட்டிருந்தன என்று தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 200,000 தொன் பாமாயிலை வருடாவருடம் இந்தோனேசியாவிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் இறக்குமதி செய்ய எடுக்கப்பட்டுள்ள முடிவை நாட்டின் கொள்வனவாளர் பாதுகாப்புச் சங்கம் வரவேற்றிருக்கிறது. “இதன் மூலம் எங்கள் தேங்காயெண்ணெய்த் தயாரிப்பு அதிகரிக்கும்,” என்று அதன் தலைவர் ரஞ்சித் வித்தனகே தெரிவித்திருக்கிறார்.
சிறீலங்காவின் விவசாயப் பொருள் உற்பத்தியில் தெங்குத் தோட்டங்கள் சுமார் 12 விகிதமாக இருக்கின்றன. உலகளவில் தேங்காயெண்ணெய் ஏற்றுமதி செய்வதில் சிறீலங்கா நான்காவது இடத்தை வகிக்கிறது. வருடாவருடம் 2,500 – 3,000 மில்லியன் தேங்காய்களை உற்பத்தி செய்வதை 3,500 மில்லியன்களாக்கும் திட்டங்கள் போடப்பட்டிருக்கின்றன.
தமது பாமாயில் இறக்குமதி செய்வதைச் சிறீலங்கா நிறுத்தியிருப்பது தமது தயாரிப்பையோ, ஏற்றுமதியையோ பாதிக்காது என்கிறார் மலேசியாவின் தொழிலமைச்சர் முஹம்மது கைருத்தீன். தமது பாமாயிலுக்கு மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்க நாடுகள், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் வேகமாக மவுசு அதிகரித்து வருவதால் சிறீலங்காவின் இறக்குமதி நிறுத்தலால் எப்பிரச்சினையுமில்லையென்கிறார் அவர்.
சாள்ஸ் ஜெ. போமன்