90 வீதம் பேர் ஊசி ஏற்றிய பிறகேஇயல்பு வாழ்வு திரும்ப சாத்தியம்!ஒக்ரோபருக்கு முன் வாய்ப்பில்லை.
சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நடவடிக்கைகளை மே மாத நடுப் பகுதியில் இருந்து படிப்படியாக ஆரம்பிக்க முடியும் என்று அரசு நம்புகிறது. கடைசியாக ஆற்றிய தொலைக்காட்சி உரையில் அதிபர் மக்ரோனும் அதனை கோடிகாட்டி இருந்தார்.
ஆனால் பிரான்ஸின் பிரபல ஆய்வு நிறுவனமாகிய பஸ்தர் நிலையம் (Institut Pasteur) அதனை மறுக்கிறது. எல்லா வயதுப் பிரிவினருக்கும் பெரும் எடுப்பில் தடுப்பூசி ஏற்றி முடிக்கப்படாமல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது சாத்தியம் இல்லை என்று அது கூறியிருக்கிறது.
“18 வயதுக்கு மேற்பட்ட வளர்ந்தவர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட பிறகுதான் மருத்துவமனை அனுமதிகள் நாளாந்தம் ஆயிரத்துக்கு குறைவடையும். அதன் பிறகே மாற்றங்கள் ஏற்படும். பெரும்பாலும் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் இருந்தே அது சாத்தியமாகலாம்.”
“கட்டுப்பாடுகளை நிரந்தரமாக நீக்குவது
என்பது ஒட்டு மொத்த மக்களும் கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியைப் (Collective immunity) பெற்றுக்கொள்வதில் தங்கி இருக்கிறது. வயோதிபர்களுக்கும் பலவீனமானவர்களுக்கும் மாத்திரம் ஊசி ஏற்றிவிட்டு அந்த இலக்கை அடைந்துவிட முடியாது” – என்று பஸ்தர்
நிலையம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இதைவிட சிறுவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டி உள்ளது. அது மிக முக்கியமானது. ஏனெனில் அவர்கள் வைரஸை தொடர்ந்தும் பரப்பிக்கொண் டிருப்பார்கள். அது ஒரு முக்கிய பிரச் சினை.அதையும் தாண்ட வேண்டும்.
வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் மத்தியில் 60, 70 வீதமான கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்பட்டால் போதும் என்று
வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்து வைரஸ் போன்ற புதிய திரிபுகளின் தொற்று வேகத்தைக் கணக்கில் எடுத்துப்பார்த்தால் 60, 70 வீதமான கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தி போதுமானதா என்ற அச்சம் எழுகிறது. எனவே தடுப் பூசியின் தேவை மேலும் அதிகமாக உள்ளது – என்று பஸ்தர் நிறுவனத்தின் தொற்று நோயியலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கட்டாய தடுப்பூசித் திட்டம் அவசியமா?
பிரான்ஸின் பொதுச் சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் படி, மொத்த சனத்தொகையில் 14 வீதமானவர்கள் மட்டுமே இதுவரை முதலாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இரண்டு தடுப்பூசி ளையும் ஏற்றிக் கொண்டோரது வீதம் ஆக 4.7 வீதம் மட்டுமே. ஊடகங்கள் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளன.
இந்த எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டு கின்ற நிபுணர்கள், நாட்டு மக்களில் பெரும்பாலானோர் இதே வேகத்தில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள பல மாதங்கள் பிடிக்கும் என்கின்றனர். கருத்துக் கணிப்புகளின்படி சுமார் 56 வீதமான வர்கள் “தடுப்பூசி ஏற்றிக் கொள்வோம். ஆனால் எப்போது என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை” என்று கூறியுள்ளனர்.
இவ்வாறான நிலைமையில் அரசு எவ்வளவு தீவிரமாகத் திட்டங்களை முன்னெடுத்தாலும் கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தி என்ற இலக்கைக் குறுகிய காலப் பகுதிக்குள் எட்டிவிட முடியாது. தடுப்பூசி ஏற்றுவதைக் கட்டாயம் ஆக்கினால் மட்டுமே அது சாத்தியம் என்று சிலர் கருதுகின்றனர்.
தடுப்பூசியைக் கட்டாயமாக்குவது குறித்துக் கேட்கப்பட்டபோது பஸ்தர் நிறுவனத்தின் தொற்று நோயியலாளர் ஒருவர்
பின்வருமாறு கூறுகிறார்.
“இந்த நேரத்தில் அது உண்மையில் அர்த்தமல்ல. நோய்த் தொற்றுக்கு எதிராகப் பலனளிக்கும் என்பது தெளிவாகத் தெரியாவிட்டால் அதனைச் செய்வதில் அர்த்தமில்லை”
குமாரதாஸன். பாரிஸ்.