இத்தாலியின் மாபியா எவரெவருக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுக்கவேண்டுமென்ற முடிவுகளையும் எடுக்கிறது.
மற்றைய நாடுகளை விட இத்தாலி தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதில் வித்தியாசமான ஒரு முதன்மைப்படுத்தலைக் கையாள்கிறது. கடுமையாகக் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு, அதிக எண்ணிக்கையில் இறப்புக்களையும் இத்தாலி சந்தித்தாலும் முதியவர்களுக்கன்றி மோசமாகப் பாதிக்கப்பட்ட மருத்துவ சேவை உட்பட்ட சில சேவையிலிருப்பவர்களுக்கே முதலில் தடுப்பு மருந்துகளைக் கொடுத்து வருகிறது.
ஆனால், சமீபத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் விபரங்களின்படி முதன்மைப்படுத்தப்பட்டவர்களின் வரிசைகளுக்குள் சம்பந்தமில்லாதவர்கள் பலரும் புகுந்து தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவ்விபரங்கள் வெளிவந்ததால் சிசிலியில் கொர்லியோனே நகரத்தின் நகரபிதா தனது பதவியிலிருந்து விலகவேண்டியதாயிற்று. மேலும் 1,000 க்கும் அதிகமானவர்கள் தடுப்பு மருந்து பெறுவதில் நடத்திய தில்லுமுல்லுகளுக்காக பொலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் 150 பேர் சிசிலியைச் சேர்ந்தவர்களாகும்.
நடந்திருப்பவைகள் இத்தாலியப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருக்கின்றது. கொவிட் 19 தடுப்பு மருந்துகளை எவரெவருக்குக் கொடுப்பதென்பதையும் மாபியாக் கும்பல் தீர்மானிக்க ஆரம்பித்துவிட்டதா என்ற சந்தேகம் எழுந்திருப்பதால் அவைபற்றி விபரமாக ஆராய அரசு முடிவுசெய்திருக்கிறது.
அதேசமயம் மேற்கொண்டு இத்தாலியில் முதியவர்களுக்குத் தடுப்பு மருந்துகொடுப்பதே முதன்மைப்படுத்தப்படுமென்ற முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்