இந்திய இரட்டைத் திரிபு வைரஸ் லண்டனில் இருவருக்கு தொற்று பிரதமரின் டில்லி விஜயம் சந்தேகம் ?
இந்தியாவில் பெரும் அலையாகத் தொற்றுக்களை ஏற்படுத்திவருகின்ற இரட்டைத் திரிபு வைரஸ் (double mutation variant) லண்டனில் இரண்டு இடங்களில் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
லண்டன் ஹரோ (Harrow) பிரென்ட் (Brent) ஆகிய பகுதிகளில் இந்த இரட்டைத் திரிபு தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்
என்று பொதுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவற்றை விட வேறு 77 திரிபுகள் பரிசோதனையின் கீழ் உள்ளன.
பிரிட்டனில் “கவலைக்குரியது ” என்ற தரத்தில் அல்லாமல் இன்னமும் “ஆய்வின் கீழ்” என்ற நிலையில் வைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகின்ற இந்திய இரட்டைத் திரிபு வைரஸ் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் நாட்டை விடுவிக்கும் கால அட்டவணையைப் (roadmap) பாதிக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் வீரியம் மிக்க இரட்டைத் திரிபு வைரஸ் மிக மோசமான முறையில் பரவிவருகின்ற போதிலும் அந்நாட்டைபிரிட்டன் இன்னும் ஆபத்தான சிவப்புப் பட்டியலில் சேர்க்கவில்லை. வேகமாகத் தொற்றும் ஆற்றல் கொண்டதும் உடல் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசிகளிடம் இருந்து தப்பிவிடக் கூடியது என்று அஞ்சப்படுகின்ற இரட்டைத் திரிபு குறித்து அரசு விழிப்படைய வேண்டும் என்று தொற்று நோயியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இம் மாத இறுதியில் புதுடில்லிக்கு பயணம் செய்யத் தயாராகிவருகின்ற நிலையில் நாட்டில் இந்தியத் திரிபு வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்படுவது அவரது விஜயத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
இவ்வாறு சில பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குமாரதாஸன். பாரிஸ்.