மலேசியாவில் சிறுபான்மையினர்களுக்கிடையே காட்டமான சர்ச்சைகள் அதிகரிக்கின்றன.
மலேசியாவின் பாதிக்கும் அதிகமான குடிமக்கள் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கும் மலாயர். அவர்களைத் தவிர சுமார் 23 % சீனர்கள், 7 % இந்தியர்களும் அங்கே வாழ்கிறார்கள். அவர்களைத் தவிர மலேசியாவின் வெவ்வேறு பழங்குடியினரும் ஆங்காங்கே தமது பிராந்தியங்களில் செறிந்து வாழ்கிறார்கள்.
நாட்டின் பொருளாதார, வர்த்தகத் துறைகளைச் சிறுபான்மையான சீனர்களே பெருமளவில் இயக்கி வருகிறார்கள். அதனால் நாட்டின் வெவ்வேறு இன மக்களுக்கு இடையேயான பொருளாதார சுபீட்சத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. இதனால் 1969 இல் ஏற்பட்ட கலவரங்கள் நாட்டில் இரத்தக் களறியை ஏற்படுத்தின, வெவ்வேறு இனத்தவரிடையே காலத்தால் மாறாத வடுக்களையும் உண்டாக்கியிருக்கின்றன.
இனக்கலவரங்களையடுத்து மலேசிய அரசு நாட்டில் புதிய சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்தன. அவைகளின் நோக்கம் பொருளாதார பலமுள்ள சீனர்கள், இந்தியர்களின் உரிமைகளை மட்டுப்படுத்தி பெரும்பான்மையினரான மலாயர்களுக்குக் கொடுப்பதாக இருந்தது. அதனால், நாட்டில் ஒருவித சமூக அநீதியான ஆட்சிமுறையே நிலவி வருகிறது எனலாம்.
சமீப காலத்தில் சமூகவலைத்தளங்களில் மலாயர்களுக்கும், சீனர்களுக்குமிடையே சர்ச்சைகள் ஏற்படுகின்றன. ஒருவரொருவரை இன ரீதியாகச் சாடி வருவதும் அதிகரித்திருக்கிறது. இரண்டு பங்கினருமே அங்கு வாழும் இந்தியர்களைச் சாடியும் வருகிறார்கள். இவையெல்லாவற்றுக்கும் நாட்டின் அரசியல்வாதிகள் சிலர் வெறுப்புக் கருத்துக்களால் தீனிபோட்டு இனவெறியை ஊக்குவித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள்.
1957 இல் மலேசியா சுதந்திரம் அடைந்தது முதலே Umnoஎன்ற கட்சியே நாட்டை ஆண்டு வருகிறது. பெரும்பானமையினரான மலாயர்களுக்குப் பிரத்தியேக உரிமைகளைக் கொடுப்பதன் மூலம் அவர்களுடையே வாக்குகளின் பலத்திலேயே அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றி வருகிறார்கள். நீண்டகாலம் அரசிலிருந்த அக்கட்சியினரிடையே லஞ்ச ஊழல் அதிகரித்து வந்ததால் பலமும் குறைந்து வருகிறது. ஆனாலும், அவர்கள் சந்தர்ப்பத்துக்கேற்றபடி சிறு கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்து வருவது வழக்கம். அவர்களின் அவாவினால் ஏற்பட்ட ஊழல் ஆட்சிகளால் அலுத்துப்போன மக்கள் 2018 ல் தேர்தல் நடந்தபோது அவர்களால் வெல்ல முடியவில்லை. அதனால், ஆட்சியை மீண்டும் கைக்குள் கொண்டுவரும் முயற்சியில் இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஊட்டி வளர்க்கும் முயற்சியில் அக்கட்டியின் உயர்மட்டம் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. தமது கையில் ஆட்சி இல்லாவிடில் நாட்டில் மலாயர்களின் முக்கியத்துவம், சுபீட்சம் எல்லாமே சிறுபான்மையினரால் பறிக்கப்பட்டுவிடும் என்று பேசி வருகிறார்கள் அந்த அரசியல்வாதிகள்.
மலேசியாவின் அரசனும், சுல்தான்களும் நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக அந்த இனவெறிக் கூச்சல்களிடையே அமைதியாக இருக்கும்படி வேண்டி வருகிறார்கள். மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் மலேசிய மாநிலங்களில் ஒன்பது மாநிலங்கள் சுல்தான்களால் ஆளப்படுகின்றன. ஐந்து வருடங்களுக்கொருமுறை தமக்குள் சந்திக்கும் சுல்தான்கள் யார் அடுத்த அரசனென்பதைத் தீர்மானிக்கிறார்கள். மலேசிய அரசன் நாட்டுக்கு ஒரு சம்பிரதாயத் தலைவராகச் செயல்படுகிறார்.
நாட்டின் சம்பிரதாயங்கள், மதம், பழக்கவழக்கங்களின் சின்னங்களாக சுல்தான்களும், மன்னர் குடும்பமும் இருப்பதால் மலேசியர்களிடையே இன எல்லையைத் தாண்டி அவர்கள் மீது பெரும் மதிப்பு உண்டு. நாட்டின் பெரும்பான்மையினரும் அந்த மதிப்பை வைத்திருப்பதால் இனவெறியைத் தூண்டும் அரசியல்வாதிகளை சுல்தான்கள், மன்னர் மறைமுகமாக விமர்சிப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். தமது நாட்டின் சம்பிரதாயத்தின் தொடராக இருக்கும் தலைவர்கள் மீது விமர்சனங்களை வீசப் பெரும்பான்மையினரே தயாராக இல்லை என்பது மலேசியாவின் பலமாக இருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்