தடுப்பு மருந்து தயாரிக்கும் இந்திய நிறுவனத்துக்கான தளபாடங்களை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா அறிவிப்பு.
“எங்கள் நாட்டு மருத்துவசாலைகள் கடந்த வருடம் கொவிட் 19 நோயாளிகளால் செயற்பாடுகளுக்குத் திணறிக்கொண்டிருந்தபோது இந்தியா எங்களுக்கு உதவியதை மறக்கவில்லை. அவர்களுக்கு நாம் உதவுவோம்,” என்று டுவீட்டியிருந்த அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க ஏற்றுமதி விதிகளைத் தளர்த்தி இந்தியாவுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்துத் தயாரிப்புக்கான தளபாடங்களை அனுப்புவதாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.
இது பற்றி அமெரிக்க தரப்பில் வெளியிடப்பட்ட செய்திகளின்படி கொவிஷீல்ட் [அஸ்ரா செனகா] தயாரிப்புக்கான இயந்திரங்களும், தளபாட உபகரணங்களையும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புதல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத் தவிர Biological E Ltd என்ற கொவிட் 19 தடுப்பு மருந்துத் தயாரிப்பிலீடுபட்டிருக்கும் இந்திய நிறுவனத்துக்கு மூலதனம் உட்பட்ட உதவிகளைச் செய்யவும் அமெரிக்கா முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
இந்தியாவின் தடுப்பு மருந்து நிறுவனமான பாரத் பயோடெக் போன்றல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் தனது மூன்றாம் கட்டப் பரிசோதனையில் ஈடுபடவிருக்கிறது Biological E Ltd நிறுவனம். அந்த நிறுவனம் 2022 இல் ஒரு பில்லியன் தடுப்பு மருந்துகளைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவருவதாக உறுதிபூண்டிருக்கிறது.
அதைத் தவிர இந்தியாவின் மருத்துவ சேவையினருக்கு உதவும் கொவிட் 19 உபகரணங்களை அனுப்பவும், ஒரு அமெரிக்க மருத்துவ சேவைக் குழுவையும் இந்தியாவுக்கு அனுப்பவிருக்கிறது.
தினசரி 2.6 மில்லியன் தடுப்பு மருந்துகளைத் தற்சமயம் தனது நாட்டில் கொடுத்துக்கொண்டிருக்கும் இந்தியா தனது நாட்டின் 75 % மக்களுக்கு அதைக் கொடுத்து முடிய இரண்டு வருடங்களாகிவிடும் என்று கணிக்கப்படுகிறது.
அமெரிக்க மருந்துப் பாவிப்புத் திணைக்களத்தால் இதுவரை அந்த நாட்டில் அனுமதி பெறாத அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகள் 20 மில்லியன் அமெரிக்காவின் கைவசமிருக்கிறது. ஏற்கனவே வேறும் மூன்று தடுப்பு மருந்துகளை நாட்டில் பாவித்துவரும் அமெரிக்கா அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளை இந்தியாவுக்கோ வேறு நாடுகளுக்கோ கொடுத்து விடலாம் என்ற கோரிக்கை சமீப நாட்களில் ஜோ பைடனின் டெமொகிரடிக் கட்சியினரால் உரத்த குரலில் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், அதைப் பற்றிய முடிவை இன்னும் ஜோ பைடன் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்