தனது ஜனாதிபதிக் காலத்தை நீடிப்பதை எதிர்ப்பவர்கள் அதிகரிப்பதால் தேர்தல் நடத்தத் திட்டமிடுகிறார் சோமாலிய ஜனாதிபதி.
திட்டமிட்டபடி நாட்டின் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்ததால் சோமாலியாவின் அரசியல் நிலைமை மேலும் மோசமாகிறது. ஞாயிறன்று ஜனாதிபதி முஹம்மது அப்துல்லாஹி முஹம்மதுவை எதிர்ப்பவர்கள் நாட்டின் இராணுவத்துடன் மோதலை ஆரம்பித்தார்கள். ஜனாதிபதியின் படைகள் தலைநகர் மொகடிஷுவின் முக்கிய வீதிகளை முடக்கியிருக்கின்றன.
தேர்தலைத் தள்ளிவைப்பதற்கான உள்நாட்டு, வெளிநாட்டு எதிர்ப்புக்களைச் சமாளிக்க முடியாத சோமாலிய ஜனாதிபதி புதனன்று மக்களுக்குக் கொடுத்த தொலைக்காட்சிப் பேச்சின் மூலம் விரைவில் தேர்தல்களை நடாத்துவதாக உறுதி கூறினார்.
“நேர அட்டவணையுடன், அமைதியான முறையில் தேர்தல்களை நடத்துவதாக நாம் எப்போதும் குறிப்பிட்டு வந்தோம். ஆனால், நாட்டின் நிலைமையை மீண்டும் முன்னர் போல மோசமாக்க முயற்சிக்கும் உள்நாட்டு, வெளி நாட்டுச் சக்திகள் அதற்கான ஆசுவாசத்தைத் தரவில்லை,” என்று தான் தேர்தல்களை விரைவில் அறிவிப்பதற்கான காரணத்தைக் கூறினார்.
நாட்டின் கீழ்ச் சபையில் ஜனாதிபதி திட்டமிட்டது போல பெப்ரவரியில் அவரது பதவிக்காலத்தை நீடிப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும், செனட் சபையில் அது எதிர்த்து வாக்களிக்கப்பட்டதால் அரசியல் நிலைமை மோசமாகி வந்தது. முழு ஜனநாயகமற்ற சோமாலியாவில் வெவ்வேறு பலமான சமூகக் குழுக்களின் தலைவர்களை ஒன்று சேர்த்துக்கொண்டே ஆட்சியமைக்க முடியும்.
சோமாலிய ஜனாதிபதி டரூட் சமூகக் குழுவைச் சேர்ந்தவர். அவர்கள் சோமாலியின் பலமான ஒரு குழுவினராகும். எதிர்க்கட்சியினரும், இராணுவத்தினரும் ஹவீயே என்ற சமூகக் குழுவைச் சேர்ந்தவராகும். தலை நகரான மொகடிஷுவில் வாழ்பவர்களில் பலரும் ஹவீயே சமூகத்தவராகும்.
ஜனாதிபதி முஹம்மதுவின் ஆட்சிக்கால நீட்டத்தை எதிர்த்த சமூகக்குழுக்களில் சிலர் ஆயுதங்களேந்திக் கிளர்ச்சிகளை ஆரம்பித்திருந்தார்கள். அரசின் இராணுவ, பொலீஸ் தலைமையும் கடந்த நாட்களில் ஜனாதிபதியின் எதிர்க்கட்சிகளின் கைகளைப் பலப்படுத்த ஆரம்பித்துவிட்டன. தலைநகரம் ஸ்தம்பித்த நிலையில் அதற்கு வெளியே இஸ்லாமியத் தீவிரவாதிகளான அல் கைதாவின் கிளையான அல் ஷபாப் வெவ்வேறு நகரங்களில் பலமாகி அரச படைகளைப் பல இடங்களிலும் தாக்கி வருகிறது.
இந்த நிலையில் ஒரு வழியாக ஜனாதிபதி தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்திருப்பதை எதிர்க்கட்சிகள் சில வரவேற்றிருக்கின்றன. ஆனால், ஜனாதிபதி தனது முடிவை நேற்றிரவு தான் எடுத்திருக்கிறார். அவர் உடனே பதவி விலகவேண்டும் என்று கோரியவர்களிடம் இன்னும் தேர்தலை நடாத்தும் திகதி வழிவகை பற்றிக் கலந்தாலோசிக்கவில்லை. சோமாலியாவில் ஒரு ஸ்திரமான ஜனநாயகம் படிப்படியாக உருவாக்கப்படவேண்டும் என்று கோரிவரும் சர்வதேச அமைப்புக்களும் ஜனாதிபதியின் முடிவை ஆதரிக்கின்றன.
ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் கண்டு பயந்துபோய் தலைநகரில் வெவ்வேறு பகுதியினருக்கிடையே போர் மூளும் அபாயம் இருப்பதாக அஞ்சி அங்கே வாழும் மக்கள் பலர் அங்கிருந்து வெளியேறி வருவதாகச் செய்தி நிறுவனங்கள் அறிவிக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்