ஜனாதிபதி போகும் வழியிருக்கும் ஹோட்டலை “பாதுகாப்புக்காகப்” பறிமுதல் செய்தார் எகிப்து பிரதமர்.
எகிப்திய ஜனாதிபதி அப்துல் பத்தா அல்-சிசியின் தினசரி வாகன அணிவகுப்பு பயணிக்கும் வழியிலிருப்பதாகக் காரணம் காட்டி ஹோட்டல் ஒன்றை அரசு பறிமுதல் செய்வதாகத் தெரிவித்தார் நாட்டின் பிரதமர். ஹேலியோபொலிஸ் ஹவுஸ் ஹோட்டல் என்ற அந்தச் சொத்தைப் பறிமுதல் செய்வதற்குக் காரணம் ஜனாதிபதியின் பாதுகாப்பு என்று விளக்கம் கூறியிருக்கிறார் பிரதமர் மொஸ்தபா மத்பூலி.
எகிப்திய ஜனாதிபதியின் மூன்று உத்தியோகபூர்வமான மாளிகைகளில் ஒன்றான அல் இத்திஹைதியா அரண்மனையிலிருந்து தினசரி குறிப்பிட்ட ஹோட்டல் இருக்கும் பாதையில் அல் சிசி பயணிப்பதுண்டு. ஜனாதிபதி வாசஸ்தலமொன்றுக்கு அருகிலிருக்கும் அப்பகுதியில் சொத்துக்கள் மிகவும் விலையுயர்ந்தவை. அப்பகுதியில் கடந்த சில வருடங்களாக அரசு கைப்பற்றிவரும் நிலச்சொத்துக்களில் இது மூன்றாவது என்று குறிப்பிடப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட ஹோட்டலுக்குப் பெறுமதியான தொகை அதன் உரிமையாளருக்குக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அல் சிசி சமீபத்தில் கொண்டுவந்திருக்கும் சட்டமொன்று நாட்டிலிருக்கும் தனியார் உடமைகள் பொதுத் தேவைகளுக்காக அரசுடமையாக்கப்படலாம் என்று குறிப்பிடுகிறது. கைப்பற்றப்படும் சொத்துக்கள் நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் பாதுகாப்புச் சேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்