எகிப்தின் கெய்ரோவில் புதுவீட்டுக்குக் குடிபோகும் மம்மிகளின் ஊர்வலம்.
வழக்கமாகக் காணக்கிடைக்காத ஒரு காட்சி எகிப்தின் தலைநகர மக்களுக்கு இன்று கிடைத்தது. அவர்களுடைய தேசியச் சொத்துக்களும், பெருமைச் சின்னங்களுமான மம்மிகள் வாணவேடிக்கைகளுடன் அலங்கரிக்கப்பட்ட வீதியில் ஊர்வலம் சென்ற காட்சியே அது.
18 எகிப்திய பேரசர்கள், 4 பேரரசிகளின் பாதுகாக்கப்பட்ட உடல்கள் பவுத்திரமான ஏதனங்களில் வைக்கப்பட்டு பல மில்லியன்கள் செலவழிக்கப்பட்டு நடாத்தப்பட்ட அந்த ஊர்வலம் நடாத்தப்பட்டது. வீதிகளில் நகரும் வாகனங்களில் சுமார் ஐந்து கிலோ மீற்றர் பயணத்தில் அவை ஆடாமல் அசையாமல் இருக்கும்படியான பெட்டிகள் அதற்காக உண்டாக்கப்பட்டிருந்தன.
ஊர்வலத்தில் எடுத்துச்செல்லப்பட்ட அந்த எகிப்திய அரசகுடும்பத்தினரின் வரிசை அவர்கள் ஆண்ட காலத்துக்கு ஏற்ப 17 ம் நூற்றாண்டிலிருந்து 12ம் நூற்றாண்டு வரையாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. நியோ கிளாசிக்கல் எகிப்திய அருங்காட்சியகத்தில் இதுவரை வாழ்ந்த அந்த அரச, அரசிகள் இனிமேல் எகிப்திய நாகரிக வளர்ச்சி அருங்காட்சியகத்தில் “பாரோக்களின் தங்க அணிவகுப்பு” என்ற பகுதியில் குடியேறுவார்கள்.
அந்த 22 மம்மிகளும் லுக்சரில் 1881, 1898 ஆகிய ஆண்டுகளில் தோண்டியெடுக்கப்பட்டன. அது தேபெஸ் என்ற பெயருடனான எகிப்தின் பண்டைக்காலத் தலைநகராகும்.
சாள்ஸ் ஜெ. போமன்