நூறு வயதுக்கு இரு மாதங்கள் பாக்கியிருக்க விண்ட்ஸர் அரண்மனையில் அமைதியாக இவ்வுலகை விட்டுப் பிரிந்தார் இளவரசர் பிலிப்ஸ்.
பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தை II, 1947 இல் திருமணம் செய்துகொண்ட பிரின்ஸ் பிலிப்ஸ் தனது 99 வது வயதில் மரணமடைந்ததாக பக்கிங்காம் அரண்மனை அறிவிக்கிறது.
கிரேக்க, டனிஷ் அரசகுமாரனாக கிரீஸில் பிறந்த பிலிப்ஸ் 1922 இல் கிரேக்க – துருக்கிய போர் நடந்தபோது அந்த நாட்டைவிட்டுப் புலம்பெயர்ந்தார். தனது உறவினர்களிடம் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டனில் வளர்ந்த பிலிப்ஸ் பிரிட்டிஷ் கடற்படையினரின் உளவுத்துறையில் பயிற்சிபெற்றுத் தேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே பல தடவைகளிலும் சந்தித்துப் பழகிய பிலிப்ஸுடன் தனது பதின்மூன்று வயதுமுதல் கடிதத்தொடர்பை உண்டாக்கிக்கொண்டார் எலிசபெத் II .
“அரசகுடும்பங்களிலேயே வறிய குடும்பத்தைச் சேர்ந்தவன் நான்,” என்று பல தடவைகளிலும் குறிப்பிட்டிருக்கும் பிலிப்ஸ் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவர்களுடைய காதலை பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் ஆதரிக்காவிட்டாலும் அசைக்கமுடியாத திடமனதுள்ள எலிசபெத்தின் விருப்பமே நிறைவேறியது.
“நான், இந்தக் குடும்பம், இந்த நாடு, மற்றும் பல நாடுகளும் நன்றி சொல்லவேண்டிய பல செயல்களுக்குச் சொந்தக்காரர் பிலிப்ஸ்….” என்று தமது 50 வது திருமண நாளன்று பெருமையாகச் சொல்லிக்கொண்டார் எலிசபெத். பல தடவைகளிலும் பத்திரிகைப் பேட்டிகளிலும் இவ்விருவரும் தமது வாழ்வில் மற்றவருடைய ஆதரவைச் சொல்லிக்கொண்டதுண்டு.
தனது எண்ணங்களை மறைக்காமல் சொல்லிப் பல பொது நிகழ்ச்சிகளிலும் மற்றவர்களைச் சிரிக்கவைத்த பிரின்ஸ் பிலிப்ஸின் அதே வழியிலான நடப்பு அவர் மீது விமர்சனங்களையும் உண்டாக்கியிருக்கிறது.
“பிரிட்டிஷ் பெண்களுக்குச் சமைக்கத் தெரியாது”, [பாரம்பரிய உடையணிந்த நைஜீரிய ஜனாதிபதியைப் பார்த்து] “நித்திரைக்குப் போகப்போவது போல உடையணிந்திருக்கிறார்”, மற்றும் நோபல் பரிசு பெற்ற மலாலாவைச் சந்தித்தபோது, “பிள்ளைகள் பாடசாலைக்கு அனுப்பப்படுவதன் காரணம், பெற்றோர் அவர்களை வீட்டில் வைத்திருக்க விரும்புவதில்லை என்பதே,” போன்றவையும் பிரின்ஸ் பிலிப்ஸை ஞாபகப்படுத்துகின்றன.
“திருமணத் தம்பதிகளுக்கிடையே அன்பு நிலைக்கவேண்டுமானால், வேண்டியவை பொறுமையும், சகிப்புத்தன்மையுமாகும். எனது மனைவியிடம் அவையிரண்டும் அளவுக்கதிகமாக இருக்கின்றன,” என்பது அவர் தமது 50 திருமண நாளில் பகிரங்கமாகச் குறிப்பிட்ட வார்த்தைகளாகும்.
“சரி, உனக்கு வேண்டிய பிடித்த படத்தை எடுத்துத் தொலை,” என்று ஒரு பத்திரிகைப் படப்பிடிப்பாளரிடம் மீண்டும் குறிப்பிட பிரின்ஸ் பிலிப்ஸ் இனி இல்லை!
சாள்ஸ் ஜெ. போமன்